| ADDED : ஜூலை 29, 2024 05:39 AM
பெங்களூரு : கர்நாடகாவின் வெவ்வேறு இடங்களில், இரண்டு சிறுமியர் டெங்குவுக்கு பலியாகினர்.கர்நாடகாவில் டெங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது; உயிரிழப்புகளும் ஏறுமுகமாகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தார்வாட் மற்றும் தாவணகெரேவில் இரண்டு சிறுமியர், டெங்கு பாதிப்பால் உயிரிழந்தனர்.தார்வாட், குந்த்கோலின், ஹிரேநர்தி கிராமத்தை சேர்ந்த பூர்ணா பாட்டீல், 5, சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இவரை குந்த்கோல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், இவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் கூடுதல் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.தாவணகெரே, நாமதியில் வசித்தவர் லிகிதா, 9. இவரும் காய்ச்சலால் அவதிப்பட்டு, ஷிவமொகாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது. நேற்று முன் தினம் இவர் உயிரிழந்தார்.