உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

புதுடில்லி, ''கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏழு நாட்களுக்கு முன்னரே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், குறுகியகால கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, கேரளநிலச்சரிவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்னரே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. கடந்த ஜூலை 23ம் தேதியன்று அது தொடர்பான முதல் எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைய தினமே, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்கள், விமானம் வாயிலாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜூலை 24, 25 மற்றும் 26ம் தேதிகளிலும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து மீண்டும் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஏழு நாட்களுக்கு முன்...

அங்கு, 20 செ.மீ.,க்கு அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது. மேலும், மூன்று மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. ஆனால், மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அம்மாநில அரசு அங்கிருந்த மக்களை வெளியேற்றவில்லை. கேரள அரசு விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம். இயற்கைப் பேரழிவுகள் குறித்து, குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை பொருட்படுத்தாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம். மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட பின், கேரள அரசு என்ன செய்தது என நான் கேட்கலாமா? பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள் வசிக்கின்றனரா, இல்லையா? அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனரா? இல்லையா? அவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை? யாராவது இதை தடுத்து நிறுத்தினரா?வெளியேற்றப்பட்டிருந்தால் மக்கள் எப்படி இறந்தனர்? இந்த துயரமான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கேரள மக்களுடனும், அம்மாநில அரசுடனும் ஒரு பாறை போல நிற்கிறது.

வலியுறுத்தல்

இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவியையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விவாதத்தின் போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ்,அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல், பா.ஜ., - எம்.பி.,க்கள், இந்த நேரத்தில் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி., ராகுல் அங்கு செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

'பினராயி விஜயன் மறுப்பு'

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய வானிலை ஆய்வு மையம், வயநாடு மாவட்டத்துக்கு 20 செ.மீ., வரையிலான மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயநாட்டில் 50 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக மிக அதிகம். நேற்று முன்தினம் காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, வயநாடு மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mario
ஆக 01, 2024 19:37

இவர் டில்லிக்கு,உத்தரகண்ட், ஹிமாச்சலுக்கு பலமுறை எச்சரிக்கை விடலையா


Sridhar
ஆக 01, 2024 13:56

கேரளா முதல்வர் பொய் சொல்லக்கூடியவர்தான் என்றாலும், உள்துறை அமைச்சர் 23 , 24, மற்றும் 25 ஆம் தேதிகளில் கொடுத்த எச்சரிக்கை அறிக்கைகளை ஆதாரபூர்வமாக எடுத்து காண்பிப்பது இங்கு மிகவும் அவசியம். உண்மையாகவே மத்திய அரசு மீண்டும் மீண்டும் எச்சரித்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், கொஞ்சம்கூட மனித தன்மையே இல்லாத இந்த மாநில அரசு இனிமேலும் பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள். ஏற்கனவே காடகில் அறிக்கையில் இந்த பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் ஆகவே கட்டிடங்கள் கட்டக்கூடாது, இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்றெல்லாம் தெளிவாக கூறியும், இந்த பினராயும் சர்ச் அமைப்புகளும் அந்த அறிக்கையை எதிர்த்து நிராகரிக்க செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குற்றவாளி கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள்தாம்.


Apposthalan samlin
ஆக 01, 2024 17:12

உத்தரகண்ட் ஹிமாச்சல் நிலச்சரிவுக்கு ஏன் எச்சரிக்கை கொடுக்கவில்லை ?பொய் சொன்னாலும் பொருந்த solanum


ராம.ராசு
ஆக 01, 2024 10:34

இது ஒரு இயற்கைப் பேரிடர். தவிர்க்கவே முடியாது. மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அதிக அளவில் அறியப்படுகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் தடுக்கவே முடியாது. இதுவே மனிதர்கள் இல்லாத பகுதியாக இருந்தால் அது இயற்கை நிகழ்வு என்றே அறியப்படும். ஒரு வாரத்துக்கு முன்னதாக எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும் எந்த அளவுக்குப் பாதிப்புகள் வரும் என்பதை அவ்வளது எளிதாக கணித்துவிட முடியாது. ஒரு வார காலத்துக்குள் அனைத்து சாத்தியக் கூறுகளையும் அறிந்து, மக்களை அப்புறப்படுத்தி விட முடியாது. உள் துறை அமைச்சரின் பேச்சு அரசியல் பேச்சாகவே தெரிகிறது. இயற்கைப் பேரழிவைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்கிறபொது, மக்கள் அதை எதிர்கொள்ள வேண்டிய மன நிலையை ஆளும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும். மலைப் பகுதிகளில் மட்டுமல்ல சமவெளியாக இருந்தாலும் இயற்கைப் பேரிடர் நிகழ்வதை தடுக்கவே முடியாது. அதற்கு சரியான உதாரணங்கள் சமீபத்தில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சென்னையும், தூத்துக்குடியும். நிகழ்வுக்குப் பிறகான பாதிப்புக்களை முடிந்த அளவு விரைவாக சரி செய்ய வேண்டும். இயற்கைப் பேரிடர். மாநில, ஒன்றிய ஆட்சி என்ற பாகுபாடு காட்டாமல், பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


P. SRINIVASALU
ஆக 01, 2024 09:53

தவறான செய்தியென்று கேரளா முதல்வர் மறுத்திருக்கிறார்


Nazeer
ஆக 01, 2024 08:51

இயற்கை சீற்றம்...இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது..தேசிய பேரிடர்....


மேலும் செய்திகள்