| ADDED : மார் 22, 2024 06:59 AM
தங்கவயல்: தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறியதால், பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராபர்ட்சன்பேட்டை பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் இம்மாதம் 19ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. இதற்கு முன்னதாக மார்ச் 16ம் தேதி முதலே லோகசபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.தேர்தல் விதிமுறைப்படி கோவில் திருவிழாக்களில் அரசியல் பேச அனுமதி கிடையாது. அரசியல்வாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து முன்னதாக தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.ஆனால், ஹிந்து அறநிலையத் துறையின் 'ஏ' பிரிவு கோவிலான பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் நடக்கும் விழாவில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி பங்கேற்பது குறித்தும், அவர் மேடையில் பேசுவது பற்றியும் கோவிலின் நிர்வாக அதிகாரி சுப்ரமணி தெரிவிக்கவில்லை.இத்துடன் கோவில் வளாகத்தில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி அரசியல் பேசியுள்ளார்; அவரது பேட்டி விபரங்கள் சமூக வலைதளங்கள், நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.இது குறித்து பலர், தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் செய்திருந்தனர். இதன்படி, கோவில் அதிகாரி சுப்ரமணியிடம் இம்மாதம் 20ம் தேதி விளக்கம் கேட்கப் பட்டது. அவரோ புகாரை மறுத்துள்ளார். ஆயினும், ஆதாரங்கள் அடிப்படையில் கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.