புதுடில்லி : தகுதியற்ற இரண்டு பொது நல மனுக்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளில் வழக்கறிஞர் கொடுத்த குடைச்சலால் நீதிபதிகள் கடுப்பாகி, அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இறுதியில் நீதிபதி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் கூறி, அவரிடமும் அந்த வழக்கறிஞர் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பேசுபொருளானது.உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் வழக்கறிஞர் அசோக் பாண்டே. சின்ன சின்ன விவகாரங்களுக்கு எல்லாம் பொதுநல மனு தாக்கல் செய்து நீதிபதிகளின் கண்டனத்துக்கும், அபராதத்துக்கும் ஆளாவதில் பிரசித்தி பெற்றவர்.உதாரணமாக, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பின் போது, தன் பெயரை கூறுவதற்கு முன், 'ஐ' என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிக்காததால், அவரது பதவி ஏற்பு செல்லாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தள்ளுபடி
காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு லோக்சபா உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் நடைமுறைக்கு தடை கோரி கடந்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் பாண்டே மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும், தகுதியற்ற மனு என்றும் தெரிவித்த நீதிபதிகள், அதை தள்ளுபடி செய்ததுடன் வழக்கறிஞர் பாண்டேவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.அதை செலுத்தாமல் வெளிநாடு சென்றார். நாடு திரும்பிய பாண்டே, அபராத தொகையை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் மாஷி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'அபராதம் விதித்து ஓராண்டுக்கு மேலாகிறது. அபராதம் விதித்ததும் வெளிநாடு சென்றுவீட்டீர்கள். வழக்கறிஞரான உங்களிடம் அபராதம் செலுத்த பணம் இல்லையா?' என, கேள்வி எழுப்பினர்.பாண்டே: கடந்த ஓராண்டாக ஒரு வழக்கு கூட எனக்கு கிடைக்கவில்லை. அதோடு, என் பிள்ளைகள் தான் தங்கள் செலவில் வெளிநாட்டுக்கு என்னை அழைத்து சென்றனர்.நீதிபதிகள்: ஒரு வாரத்தில் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இரண்டு வாரங்களிலாவது செலுத்திவிடுவீர்களா என, தெளிவாக பதில் சொல்லுங்கள்.பாண்டே: என் பிள்ளைகள் தான் பணக்காரர்கள். நான் ஏழை. முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போது அவருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. நான் மட்டும் பல மனுக்களை தாக்கல் செய்து அவருக்காக ஆஜராகி வாதாடினேன்.அந்த வழக்குகளுக்கான கட்டணத்தை அளிக்கும்படி முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளேன். உச்ச நீதிமன்ற சட்ட சேவை கமிட்டியிடம் தீபக் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். அந்த தொகை வந்துவிடும்; விரைவில் அபராதம் செலுத்துகிறேன். உரிமம் ரத்து
இதை கேட்ட நீதிபதிகள் ஆக., 5 வரை அவருக்கு அவகாசம் அளித்தனர். அதற்கு மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என, கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.இதை தொடர்ந்து மற்றொரு அபராத வழக்கில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் அசோக் பண்டே ஆஜரானார்.தேசியவாத காங்., - எம்.பி., முகமது பைசல் என்பவரின் லோக்சபா உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:நீதிபதிகள்: இன்னும் எத்தனை நீதிமன்றங்கள் உங்களுக்கு அபராதம் விதித்துள்ளன?பாண்டே: என்னிடம் பணம் இல்லை. அபராதத்தை தயவு செய்து ரத்து செய்யுங்கள்.நீதிபதிகள்: உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீங்கள் போகலாம்.பாண்டே: கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். அபராதத்தை ரத்து செய்யுங்கள். நீதிபதி கவாய் அவர்கள் அடுத்த தலைமை நீதிபதி ஆகப்போகிறீர்கள். தயவு செய்யுங்கள்.நீதிபதி கவாய்: அது பற்றி கடவுளுக்கு தான் தெரியும். நீங்கள் வெளியேறவில்லை எனில், செக்யூரிட்டிகளை அழைக்க வேண்டி இருக்கும்.நீதிபதிகள் கடுமையாக எச்சரித்த பின் வழக்கறிஞர் பாண்டே வெளியேறினார்.அங்கிருந்து நேராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறைக்கு சென்ற அவர், “வக்கீலாக நான் பணியாற்றுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று, நீதிபதி கவாய் என்னை மிரட்டுகிறார்,” என புகார் தெரிவித்தார்.கடுப்பான தலைமை நீதிபதி, “நீதிமன்றங்களில் வாதங்கள் நடப்பது சகஜம். அமர்வில் உள்ள நீதிபதிகள் மீது இதுபோன்ற புகார்களை சொல்லக் கூடாது. அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமானால், மறுஆய்வுக்கு மனு செய்யுங்கள்,” எனக்கூறி அவரை அனுப்பி வைத்தார்.