கர்நாடகாவில், சட்டசபை, மேலவை என, இரண்டு அவைகள் உள்ளன. இவை இரண்டையும் சேர்த்து, சட்டமன்றம் என்று அழைக்கப்படுகிறது. சட்டசபைக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவரும், மேலவைக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவரும் இருப்பர்.ஒரு கேபினெட் அந்தஸ்து கொண்ட அமைச்சருக்கு, விதான் சவுதா அல்லது விகாஸ் சவுதாவில் அலுவலகம், அரசு பங்களா, தனிச் செயலர், தனி உதவியாளர், சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கும், அரசு பங்களாவுக்கும் பாதுகாப்பு உட்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும். பாதுகாப்பு வசதி
அவர் செல்லும் இடம் எல்லாம், 'கன் மேன்' கூடவே வருவார். ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது, தன் வாகனத்துக்கு முன், பைலட் வாகனம் எனும் பாதுகாப்பு வாகனம் செல்லும்.நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போதும், உள்ளூர் போலீசாரின் பாதுகாப்பு கிடைக்கும். செல்லும் இடம் எல்லாம், கவுரவம், மதிப்பு, மரியாதை, முன்னுரிமை கிடைக்கும்.கேபினெட் அமைச்சர்கள் அனுபவமிக்கும் இந்த அனைத்து வசதிகளும் மேலவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிடைக்கும். இது மட்டுமின்றி எம்.எல்.சி.,யாக அடிப்படை சம்பளம் 40,000 ரூபாய், தொலைபேசி செலவுக்கு 20,000 ரூபாய், தேர்தல் தொகுதி படிகள் 60,000 ரூபாய், தபால் செலவுக்கு 5,000 ரூபாய், தனி உதவியாளர், ரூம் பாய் சம்பளம் 20,000 ரூபாய்; தொகுதியில் பயணம் செய்ய 60,000 ரூபாய் என மாதந்தோறும் 2,05,000 ரூபாய் பெறுவார்.இதனாலேயே சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் போன்று, மேலவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் மவுசு உண்டு. எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் விபரங்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளிக்க வேண்டும்.இதனால் தான் அந்த பதவியை பெறுவதற்கு, எப்போதும் மூத்த தலைவர்கள் 'போட்டா போட்டி' போடுகின்றனர். இந்த வகையில், கடந்தாண்டு முதல், இந்தாண்டு ஜூன் வரை, மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் கோட்டா சீனிவாச பூஜாரி. அவர் உடுப்பி சிக்கமகளூரு எம்.பி.,யாகி உள்ளார். மூத்த தலைவர்கள்
அவர் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்ததால், அந்த பதவி காலியானது. எனவே, பா.ஜ.,வின் ரவிகுமார், சி.டி.ரவி, பாரதிஷெட்டி உட்பட மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது ஆசை நிறைவேறாமல் மூக்குடைப்பு ஏற்பட்டது.மாறாக முதல் முறை எம்.எல்.சி., ஆன சலவாதி நாராயணசாமிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. நேற்று, அவரை மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிமுகம் செய்து வைத்தார்.தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்கு கட்சி மேலிடமே பச்சைக்கொடி காண்பித்தது. பா.ஜ.,வில் வளர்ந்து வரும் தலைவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், பதவியை வழங்கி அவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.- நமது நிருபர் -