பண மோசடி வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது
புதுடில்லி: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரியில் டில்லியில் கைது செய்தனர்.இதில் மூளையாகச் செயல்பட்ட, தி.மு.க., சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 36, மார்ச் 9ல் கைது செய்யப்பட்டதை அடுத்து, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்த வழக்கில், டில்லியில் உள்ள திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் நடந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், போதைப் பொருள் கடத்தலில் நடந்த பண மோசடி வழக்கில், திஹார் சிறையில் வைத்து, கடந்த 26ல் ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.அவரை, விரைவில் சென்னைக்கு அழைத்து வந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.