மேகவெடிப்பில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
உத்தரகாசி: உத்தராகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 10 ராணுவ வீரர்களும் மாயமாகி உள்ளனர். மீட்பு பணி முழுவீச்சில் நடக்கிறது உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தாராலியில் இன்று மதியம் மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி அப்பகுதியில் இருந்த சில வீடுகளை அடித்துச் சென்றது. மேலும் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நிலச்சரிவும் ஏற்பட்டது.இதில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதில், ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்த ராணுவ முகாம் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டது. அதில், இருந்த 8 முதல் 10 வீரர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அதேநேரத்தில், மறுபுறம் பொது மக்களை மீட்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தயார் நிலையில் விமானப்படை
உத்தரகாசியில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக விமானப்படையின் சினூக் எம்ஐ- 17 வி5, சீட்டா மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டர்கள் சண்டிகர் விமானப்படை தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேவையான நிவாரண பொருட்கள் அவற்றில் உள்ளன. சம்பவ இடத்தில் வானிலை தெளிவானதும் உடனடியாக அவை புறப்பட்டு செல்லும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.