உறவினர்களால் 19 வயது இளைஞர் குத்திக்கொலை
புதுடில்லி:வட கிழக்கு டில்லியில், 19 வயது இளைஞர், உறவினர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.டில்லியின் வட கிழக்கே உள்ள சீலாம்பூர் என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 10:40 மணிக்கு அந்த இளைஞர் கொல்லப்பட்டார். உறவினர்களான அவர்களுக்குள் ஏற்கனவே இருந்த தகராறு காரணமாக, ஜாஹீர் அப்பாஸ் என்ற அந்த 19 வயது இளைஞனை, காசிம், 47, அவர் மகன்கள் ஆசிப் மற்றும் காசிம் மகனான இன்னொரு சிறுவன் ஆகியோர், கத்தியால் குத்தி கொன்றனர்.போலீசார் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன், உடனடியாக அவரின் உறவினர்கள், அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். எனினும், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்து விட்டதாக, சீலாம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறினர்.ஜாஹீர் அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்த காசிம் மற்றும் அவரின் இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை குத்திக் கொன்ற ஆயுதத்தை மீட்கும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.