உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு

3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு

புதுடில்லி:குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, மூன்று கல்லுாரிகள் மற்றும் 45 பள்ளிகளுக்கு நேற்று காலை மிரட்டல் இ - மெயில் வந்ததால், அந்த கல்வி வளாகங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டன. ஒரே வாரத்தில் நான்காவது முறையாக வந்த மிரட்டல் இ - மெயிலை கண்டுபிடிக்காத பா.ஜ., அரசுக்கு, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.வாரத்தில் இறுதி வேலை நாளான நேற்று வெள்ளிக்கிழமை, தலைநகர் டில்லியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மிரட்டல் நாளாக அமைந்திருந்தது. இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லுாரி, ஹிந்து கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராம் காமர்ஸ் கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகளுக்கு, மிரட்டல் இ - மெயில் வந்திருந்தது.அந்த இ - மெயிலில், 'ஹலோ... உங்கள் பள்ளி அல்லது கல்லுாரி வளாகத்தில், பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகள் பல இடங்களில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எந்த நேரமும் வெடிக்கச் செய்யலாம். அந்த குண்டுகள், கறுப்பு நிற பையில் வைக்கப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதுபோல, டில்லி மாநகரின் பல பகுதிகளில் உள்ள, 45க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் மிரட்டல் இ - மெயில் வந்திருந்தது. அதையடுத்து, அந்த பள்ளிகளின் வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; மோப்ப நாய்கள் மற்றும் நவீன இயந்திரங்களுடன் சோதனை மாலை வரை நடந்தது.எனினும், எந்த இடத்திலும் குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால், நிம்மதி பெருமூச்சை பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் வெளியிட்டாலும், பள்ளிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மிரட்டல் இ - மெயில் வந்ததும், பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில் மாணவர்கள், வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் பல பள்ளிகளில், மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கும்பலாக அமர வைக்கப்பட்டனர். இன்னும் சில பள்ளிகளில், வழக்கம் போல இயங்கின. எத்தனை நாட்களுக்குத் தான் இந்த மிரட்டல் என எண்ணி, அந்த பள்ளிகள் இயங்கின.

காட்டு தர்பார் ஆட்சி!

டில்லி மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் செயலற்ற பா.ஜ., அரசால், பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர்ந்து வரும் மிரட்டல் இ - மெயில்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்த மாநிலத்தில் பா.ஜ.,வின் காட்டு தர்பார் நடக்கிறது. இந்த எச்சரிக்கை முறைகேடு தொடரக் கூடாது. பள்ளிகளில் குழந்தைகளை விட்டு, தங்கள் வேலைகளுக்கு செல்லும் பெற்றோர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சமடைந்துள்ள பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நேற்று மட்டும், 45 பள்ளிகளுக்கு மிரட்டல் இ - மெயில் வந்துள்ளது. இது, ஒரு வாரத்தில் நான்காவது மிரட்டல்.- சவுரவ் பரத்வாஜ், டில்லி நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர்அதிர்ச்சி அளிக்கிறது!நேற்று மட்டும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் இ - மெயில் வந்துள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஏற்படும் மனச்சுமைகளை இந்த அரசு அறியுமா... டில்லி அரசு நிர்வாகத்தின் நான்கு இன்ஜின்களை வைத்துள்ள பா.ஜ., இந்த மோசடி தொடர்பாக ஒரு நபரை கூட இன்னமும் கைது செய்யவில்லை. மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது.ஆடுஷி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், ஆம் ஆத்மி கட்சிதொடரும் வேதனை!எங்களின் நிம்மதி பறிபோய் பல மாதங்கள் ஆகி விட்டன. தொடர்ந்து பல முறை, இ - மெயில் மிரட்டல் வந்தும், இன்னமும் யாரையும் இந்த மாநில போலீசார் கைது செய்யவில்லை. காலையில் குழந்தைகளை பள்ளிக்கு விட அழைத்து வருகிறோம். வந்ததும், வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனே அழைத்து செல்லுங்கள் என்கின்றனர். நாங்கள், அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாமா?இந்த வாரத்தில் மட்டும், நான்காவது முறையாக மிரட்டல் இ - மெயில் வந்துள்ளது. எங்களின் கஷ்டத்தை யார் அறிவார்? பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. எத்தனை நாட்களுக்கு இப்படி குழந்தைகளை பூட்டி வைக்க முடியும்? இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.- பள்ளி குழந்தைகளின் பெற்றோர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !