அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா ஒரு வரலாற்று சிறப்புமிக்க கலாசார தருணத்தை கண்டுள்ளது. இது வெறும் கொடி அல்ல, கலாசார அடையாளம். இதன் மூலம், 500 ஆண்டு கால கனவு நிஜமாகி உள்ளது,'' என, குறிப்பிட்டார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், 2.77 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில், 2024 ஜன., 22ல் பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது முதல், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால ராமரை தரிசித்து வருகின்றனர்.இந்நிலையில், ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து, கோவில் கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் இணைந்து, 161 அடி உயர கோவில் கோபுரத்தில் காவி கொடியை ஏற்றினர். தொடர்ந்து, பால ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்து இருவரும் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கலாசார உணர்வின் வாழும் அடையாளமாக அயோத்தி மாறி உள்ளது. இன்று ஒட்டுமொத்த நாடும், உலகமும் ராம மயமாக உள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் முழுமையான திருப்தி உள்ளது. எல்லையற்ற நன்றியுணர்வும், அளவிட முடியாத ஆன்மிக ஆனந்தமும் உள்ளது.அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கொடி அல்ல, நாட்டின் கலாசார அடையாளம். நாட்டின் கலாசார விழிப்புக்கு இன்றைய நாள் சாட்சியாக உள்ளது. இதன் மூலம் பல நுாற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வருகிறது; 500 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது.வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது. இந்த காவி கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது. இது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ராமரின் கொள்கைகளை பறைசாற்றும். அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் ராமர் கோவிலுக்கு வரும் போது, சப்த மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அயோத்தி தற்போது, உலகிற்கு ஒரு முன்மாதிரி நகரமாக மாறி வருகிறது.நாம் பாகுபாடுகளால் அல்ல, உணர்வுகளால் ராமருடன் இணைகிறோம். அவரது போதனைகளான கடமை, கருணை, தைரியம், நீதி ஆகியவற்றால் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையை வடிவமைக்க வேண்டும். 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், ராமர் காட்டிய பாதையில் நாம் நடக்க வேண்டும். நம் பாடத்திட்டத்தை வகுத்த ஆங்கிலேய அதிகாரி மெக்காலேயின், 200 ஆண்டு கால அடிமை மனநிலையை அடுத்த, 10 ஆண்டுகளில் நாம் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நுாற்றாண்டு கனவு!
ராமர் கோவில் கட்டுவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மா, இன்று நிச்சயம் சாந்தி அடைந்திருக்கும். நீண்ட கால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. ராமரின் கொடி கம்பீரமாக பறக்கிறது. கொடியின் காவி நிறம் தர்மத்தை குறிக்கிறது. நுாற்றாண்டு கனவு இன்று நனவாகி உள்ளது. மோகன் பகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
காவி கொடி
அயோத்தியில், 161 அடி உயர ராமர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்டுள்ள காவி கொடி, 22 அடி நீளமும், 11 அடி அகலமும் உடையது. அனைத்து பக்கமும் சுழலக் கூடிய வகையில் முக்கோண வடிவில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராமரின் வீரம், பெருமையை குறிக்கும் வகையில், காவி கொடியில் ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் ராம ராஜ்யத்தின் மாநில மரம் என்று விவரிக்கப்படும் கோவிதார மரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தனித்துவம்
வழக்கமாக, கொடியேற்றும் விழாக்களில் கொடியை மேலே ஏற்றி விரிக்க, கீழே இருந்து கயிறு இழுக்கப்படும் அல்லது ஒரு பொத்தானை அழுத்தி, மேலே பறக்கும் கொடியை சுற்றி இருக்கும் திரை அகற்றப்படும். ஆனால், ராமர் கோவில் கொடியேற்றும் விழாவில் இந்த நடைமுறைகளுக்கு மாற்றாக தனித்துவமான செயல்முறை கடைப்பிடிக்கப்பட்டது. வேத சடங்குகள் முடிந்த பின், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர், மடித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கு அருகே சென்று, கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சின்னத்தை, கொடியை நோக்கி நகர்த்தினர். அப்போது கீழே இருந்து கயிறு மூலம் மேலே சென்ற கொடி கம்பீரமாக பறந்தது.