உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் கலக்கும் சமையல் கலைஞர்!

அமெரிக்காவில் கலக்கும் சமையல் கலைஞர்!

அமெரிக்காவில் சமையல் கலைஞராக கலக்கும், தமிழர் அசோக் நாகேஸ்வரன்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை தான் என் சொந்த ஊர். பட்டப்படிப்பு முடித்த பின், மேற்படிப்புக்காக சென்னை சென்றேன். அப்படியே, மார்க்கெட்டிங் துறையில் வேலை. என் மனைவி மனிதவள துறையில் அதிகாரியாக பணியாற்றினார். அவருக்கு, அமெரிக்காவில் பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலை கிடைத்தது. மனைவிக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, 3 வயது மகனுடன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தேன். அங்கு, மிசவுரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லுாயிஸ் நகரத்தில் இப்போது வசிக்கிறோம். அ மெரிக்கா சென்றபின், மார்க்கெட்டிங்கை தொடரலாமா, வேறு ஏதேனும் புதிதாக செய்யலாமா என்ற தவிப்பு இருந்தது. அப்போது என் மனைவி, 'சமையலில் உங்களுக்கு ஆர்வம் இருக்கி றது. அது குறித்து முறைப்படி நீங்கள் ஏன் படிக்கக்கூடாது?' என்று கேட்டார். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். 40 வயதில் கல்லுாரிக்கு படிக்கச் செல்வது, இந்திய பின்னணி கொண்ட நமக்கு சற்று பழக்கப்படாத அனுபவம் தான். ஆனாலும், புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன். இந்த மனோபாவம், என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு உதவி செய்தது. நான் எந்த உணவகத்தையும் நடத்தவில்லை. தனிப்பட்ட நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு மட்டும் சமைத்து கொடுக்கிறேன். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என, பல பிரபலங்களுக்கு சிறப்பு சமையல்காரராகவும் வேலை பார்க்கிறேன். இந்தியாவிலும் நிறைய பிரபலங்கள், என் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். உணவு தொடர்பாக கிட்டத்தட்ட, 2,000 நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன். 90 நாடுகளின் உணவுகளை மக்களுக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறேன். அதிகம் கேள்விப்படாத உணவுகள், சுவைத்திராத உணவுகள் என பரீட்சார்த்தமாக சமைத்து, வெற்றியும் பெற்றிருக்கிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக, சமையல் சார்ந்த ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். அமெரிக்காவில் இருப்பதால் , பல நவீன மாற்றங்களை இந்த துறையில் பார்க்கிறே ன். சமைப்பதற்கு ரோபோக்கள் வந்துவிட்டன; சமையலிலும் செயற்கை நுண்ணறிவான, ஏ.ஐ., ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனாலும், சமையல் கலைஞர்களின் வெற்றிடத்தை ரோபோக்களால் நிரப்ப முடியாது. முன்பை விட இப்போது, உணவு துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அடுத்த, 10 ஆண்டுகளில் இந்த தேவை இன்னும் அதிகரிக்கும். உலகம் உள்ள வரை உணவு இருக்கும்; உணவின் தேவை இருக்கும் வரை, நல்ல சமையல் கலைஞர்களின் தேவையும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை