உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத கொடசாத்ரி மலை

வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத கொடசாத்ரி மலை

கர்நாடகாவை சுற்றிலும், மலையேற்றத்துக்கு தகுதியான இடங்கள் ஏராளம். சுற்றுலா பயணியர், டிரெக்கிங் பிரியர்கள் அதிகம் விரும்பும் இடங்களில், கொடசாத்ரியும் ஒன்று. இயற்கை அன்னை நமக்கு அள்ளிக் கொடுத்த வரங்களில், இதுவும் முக்கியமானது.ஷிவமொக்கா மாவட்டத்துக்கு, கொடசாத்ரி மலை பெருமை சேர்க்கிறது. அற்புதமான சுற்றுலா தலமாகும். 1,343 அடி உயரமான இம்மலை. இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் இடமாகும். பச்சை பசேல் என நெற்பயிர், புல்வெளிகள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் கொண்ட அற்புதமான பகுதியாகும்.ஒரு முறை கொடசாத்ரிக்கு வந்தால், அந்த இனிமையான அனுபவத்தை வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. இங்குள்ள ஹிட்லுமனே நீர்வீழ்ச்சி, மிகவும் அற்புதமானது. கீழே நின்று அண்ணாந்து பார்த்தால், நம் தலை மீது விழுவதை போன்ற உணர்வு ஏற்படும்.கொடசாத்ரி மலை சுற்றுலா தலம் மட்டுமல்ல, ஆன்மிக தலமாகவும் விளங்குவது சிறப்பு. இங்கு கற்களால் கட்டப்பட்ட மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இங்குதான் மூகாம்பிகை, மூகாசுரனுடன் போரிட்டு வதம் செய்ததாக கூறப்படுகிறது. மலை உச்சியில் அமைந்துள்ள கோவில், காலை மற்றும் மாலையில் பனிப்போர்வையால் மூடப்பட்டிருப்பது, அற்புதமான காட்சியாக இருக்கும்.மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில், கொடசாத்ரியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மலையேறும்போது காட்டுப் பாதையில் செல்வது நல்லது. சாகசம் செய்வதாக நினைத்து, பாறைகள் மீது ஏறுவது ஆபத்தானது. மூலிகை தாவரங்கள் நிறைந்த காட்டுப் பாதையில், சுத்தமான காற்றை சுவாசித்தபடி செல்வது, மனதுக்கும், உடலுக்கும் இதமான அனுபவத்தை அளிக்கும்.கொடசாத்ரி மலைக்கு செல்லும்போது, முதலுதவி சிகிச்சை, அடையாள அட்டை, குடிநீர், குளுக்கோஸ், உலர்ந்த பழங்கள், சிற்றுண்டி உட்பட தேவையான பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். அங்கு தங்க விரும்பினால் பொதுப்பணித்துறை விடுதி உள்ளது. இங்கு தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

எப்படி செல்வது?

ஷிவமொக்காவில் இருந்து, கொடசாத்ரி 110 கி.மீ., தொலைவில் உள்ளது. பெங்களூரு உட்பட, முக்கியமான நகரங்களில் இருந்து, அரசு பஸ்கள், ரயில்கள் வசதி உள்ளது. ஷிவமொக்காவில் விமான நிலையம் இருப்பதால், விமானத்திலும் வரலாம். ஷிவமொக்காவின் நிட்டூருக்கு வந்து அங்கிருந்து, கொடசாத்ரிக்கு செல்ல ஜீப் வசதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை