| ADDED : செப் 29, 2024 10:22 PM
திருவனந்தபுரம்: மலையாள நடிகரும், இயக்குநருமான பாலச்சந்திர மேனன் மீது மலையாள நடிகை பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்து புகார் தேசிய அளவில் பெரும் பரப்பை உண்டாக்கியுள்ளது. பிரபல மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர்கள் முகேஷ் (சி.பி.எம்., எம்.எல்.ஏ.,), ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பல நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி 3,896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கி உள்ளது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை, பல்வேறு தகவல்களை மீண்டும் பகிர்ந்துள்ளார். அதில், பிரபல நடிகரும், இயக்குநருமான பாலச்சந்திர மேனன் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2007ம் ஆண்டு ஒரு அறையில் 3 பெண்களுடன் சில ஆண்கள் பாலியல் உறவு கொண்டதாகவும், அதனை பார்க்குமாறு தன்னை சித்ரவதை செய்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.மேலும், அவர் கூறியதாவது: நடிகர்கள் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை திருப்தி அளிக்கிறது. பாலியல் புகாருக்குள்ளான எம்.எல்.ஏ., முகேஷை கைது செய்வது எளிதான காரியமல்ல. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான போது, அது என்னுடைய உள்ளுணர்வை பிரதிபலித்தது. பெறப்படும் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதுவே, இந்த பாலியல் தொல்லை குறித்து பேச காரணமாக இருந்தது. எனக்கு எதிர்க்கட்சியினர் முழு ஆதரவு கொடுக்கின்றனர். இது சினிமா உலகில் நடக்கும் அநீதி என்பதால், அவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன், எனக் கூறினார்.