உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் நம்பிக்கையை இழந்தது ஆம் ஆத்மி: பா.ஜ.,

மக்கள் நம்பிக்கையை இழந்தது ஆம் ஆத்மி: பா.ஜ.,

புதுடில்லி:“பூஜாரி மற்றும் கிரந்திகளுக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் கவுரவ ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ள ஆம் ஆத்மி, அரசியலில் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது,” என, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறினார்.டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, நிருபர்களிடம் கூறியதாவது:கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இந்திய அரசியலில் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அக்கட்சியின் கோமாளித்தனத்தை டில்லி மக்கள் உணர்ந்து விட்டனர்.அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து உருவான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியைப் போலவே பழைய அரசியலையே செய்கிறது. இதனால், அக்கட்சி மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அர்ச்சகர் மற்றும் சீக்கிய கிரந்திகளுக்கு மாதந்தோரும் 18,000 ரூபாய் கவுரவ ஊதியம் வழங்குவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இப்போது ஆட்சியில் இருக்கும்போதே இந்த திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை?ஒரு காலத்தில், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்த கெஜ்ரிவாலுக்கு, இப்போது மத குருமார்கள் மீது தேர்தல் நேரத்து பாசம் ஏற்பட்டுள்ளது. இது பாசம் அல்ல பாசாங்கு என்பதை உணர வேண்டும்.அவர் அறிவித்தது தேர்தல் வாக்குறுதி என்றல், அதற்கான படிவத்தை இப்போதே நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?டில்லி மாநகர் மற்றும் புறநகரில் பாதுகாப்பற்ற நிலையில் தொங்கும் மின்சார வயர்களை சீரமைக்க ஆம் ஆத்மி அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, 24 மணிநேரம் சுத்தமான குடிநீர் வினியோகம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதை அக்கட்சி உணர வேண்டும்.டில்லியில் மாசு இல்லாத சூழல், யமுனை நதியை தூய்மைப்படுத்துதல், சுகாதாரம், குப்பைக் குவியல்களை அகற்றுதல், பெண்களுக்கான பாதுகாப்பு, காலனிகளில் அடிப்படை வசதிகள் ஆகிய கடந்த கால வாக்குறுதிகளை கெஜ்ரிவால் மறந்து விட்டார்.முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருக்கின்றனர் என்பதை டில்லி மக்கள் மறந்து விட மாட்டார்கள்.சோனியா கட்டுப்பாட்டில் ஒரு பிரதமர் இருந்ததைப் போல, இப்போது டில்லியில் ஒரு முதல்வர், கட்சியின் மூத்த தலைவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை