புதுடில்லி:டில்லி நகரில் நிலவும் காற்றின் சுத்தத்தன்மை குறியீடு, தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்றும், 'மிகவும் மோசம்' என்ற அளவிலேயே இருந்தது. நகரின் ஒட்டுமொத்த ஏ.க்யு.ஐ., குறியீடு, 398 ஆக இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி நேற்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி, 40 கண்காணிப்பு மையங்களில், 21 மையங்களில் காற்றின் சுத்தத்தன்மை குறியீடு, மிகவும் ஆபத்தானது என்ற அளவில் இருந்தது. குறிப்பாக, டி.டி.யு., புராரி, சாந்தினி சவுக், ஆனந்த் விஹார், முண்ட்கா, ஓக்லா, பாவனா மற்றும் வசிர்புர் ஆகிய கண்காணிப்பு மையங்களில் ஏ.க்யு.ஐ., அளவு, 400க்கு அதிகமாகவே இருந்தது. மாசு கட்டுப்பாட்டு மைய குறியீடுகளின் படி, ஏ.க்யு.ஐ., 0 - 50 என்ற அளவில் இருந்தால் சிறப்பானது; 51 - 100 என்ற அளவில் இருந்தால் திருப்திகரம்; 101 - 200 நடுநிலை; 201 - 300 என்ற அளவில் இருந்தால் மோசம்; 301 - 400 என்ற அளவில் இருந்தால் மிகவும் மோசம்; 401 - 500 என்ற அளவில் இருந்தால், ஆபத்தானது என குறிப்பிடப் படுகிறது. நகரின் குறைந்தபட்ச வெப்ப நிலை, 11.4 டிகிரி செல்ஷியஸ் என, இந்த சீசனின் சராசரி அளவை விட, 0.9 சதவீதம் குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்ப நிலை, 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது.