புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில், உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாலும், அவரது ஆதரவாளர்களுக்கு சுவையான காலை உணவு வழங்கப்பட்டது.
ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரே, திகார் சிறையிலிருந்த மூன்று நாட்களும் சாப்பிடவில்லை. மொத்தம் ஆறாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஹசாரேயை உற்சாகமூட்ட, இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு குவியும் ஆதரவாளர்களுக்கு காலை உணவாக நேற்று, சமோசா, கச்சோரி, ரசகுல்லா, பக்கோடா உட்பட நொறுக்குத் தீனிகள், டீ, பிஸ்கட், வாழைப்பழம் மற்றும் மாம்பழ ஜூஸ் ஆகியவற்றை ஹசாரே குழுவினர் வழங்கினர். சில ஆதரவாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை பிரசாதம் போல் பாவித்து உட்கொண்டனர்.மைதானத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் போதுமானதாக இல்லாததால், பேப்பர் பிளேட்டுகள் மற்றும் அரைகுறையாக சாப்பிட்டு விட்டு வீசிய உணவுப் பொருட்கள், குப்பைத் தொட்டிகளைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. ராம்லீலா மைதானத்தில் குழுமியிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், ஹசாரேயை வாழ்த்தி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். மைதானம் முழுவதும், தண்ணீர் ஒழுகாதபடி தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடில்கள், தண்ணீர் ஒழுகியபடி இருந்தன. இதை உணர்ந்து தண்ணீர் ஒழுகாத வகையில், குடில்களை ஜிந்தால் அலுமினியம் நிறுவனம் அமைத்து தந்தது.