| ADDED : ஜூலை 20, 2011 07:38 PM
நகரி: திருமலையில், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை சிலர் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ம்தேதி முதல், உடனடி பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் முறைகேடின்றி வழங்க, தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சிறப்பு அதிகாரி சத்யநாராயணா தலைமையில், திருமலையில் நடந்தது. திருமலை கோவிலின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளான தோமாலை, அர்ச்சனை, வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக சேவைகளுக்கான டிக்கெட்டுகளை சிலர், நிபந்தனைக்கு எதிராக மொத்தமாக, 10 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்துக் கொண்டனர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக,தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. விசாரணையில், உண்மை என கண்டறியப்பட்டதால், மொத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்த சேவா டிக்கெட்டுகளை, தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்ய முடிவு செய்தது. இதன் அடிப்படையில், ரத்து செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 'கரன்ட் புக்கிங்' மூலம் அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.