| ADDED : ஜன 12, 2024 01:31 AM
இம்பால், மணிப்பூரின் சுராச்சந்த்பூர் மற்றும் தெங்கனோபால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூக்கி உள்ளிட்ட பழங்குடியின அமைப்புகள் கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 180 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுதும் அடிக்கடி போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி பாதுகாப்பு படையினர் தெங்கனோபால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, நான்கு கையெறி குண்டுகள், ஏ.கே., 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி, ஐந்து சிறிய வகை நாட்டுத்துப்பாக்கி, ஐந்து வெடிகுண்டுகள், ஏ.கே., 56 வகை துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடி பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் கடந்த 9ம் தேதி சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், சிறிய துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி ஒன்று, ஐந்து ஒற்றைக்குழல் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கண்ணீர் புகைக்குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சுராச்சந்த்பூர் மலைப்பகுதிக்கு நேற்று முன்தினம் விறகு சேகரிக்கச் சென்ற பிஸ்ணுபூர் மாவட்டம் அகாசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் மாயமானதாக தகவல் வெளியானது.இந்நிலையில், விறகு சேகரிக்கச் சென்ற மூவர் நேற்று சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டனர். மாயமான மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இறந்த மூவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.