– சிறப்பு நிருபர் –: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று நடக்கும் நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, அவரை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, ‘உலக பொதுமறை’ என்றழைக்கப்படும் திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, பிரிக்ஸ் எனப்படுகிறது. இந்த அமைப்பில், ஈரான், இந்தோனேஷியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, எகிப்து ஆகிய ஆறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் நேற்று காலை தனி விமானத்தில் டில்லி வந்தார். அவரை மத்திய அரசின் உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனர். இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் நேற்று சந்தித்து பேசினார். அவரை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். அப்போது, பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம், அரியவகை கனிமங்கள், முதலீடு உள்ளிட்ட துறைகளில், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். கடல்வழி வர்த்தகம், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை பாதித்துள்ள மேற்காசியா மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். வரும், 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை, 9.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ‘எஸ் – 400’ வான் பாதுகாப்பு அமைப்பு, ‘சுகோய் – 57’ போர் விமான வினியோகம் குறித்தும் ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இவற்றை விரைவில் வழங்குவதாக ரஷ்யாவும் உறுதி அளித்துள்ளது. பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் இரு வாரங்களில் இரண்டாவது முறை சந்தித்துள்ளார். முன்னதாக, கடந்த 31ல், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், இரு தலைவர்களும் சந்தித்தனர். பிரதமருக்கு அழைப்பு இந்தியா – ரஷ்யா இடையேயான, 24வது வருடாந்திர உச்சி மாநாடு, இந்தாண்டு இறுதியில் ரஷ்யாவில் நடக்கிறது. பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ரஷ்ய அதிபர் புடின், இந்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி நேரில் அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றார். மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. யார் யார் பங்கேற்பு? டில்லியில் இன்று நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், தென் ஆப்ரிக்க அதிர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன், எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அபி, இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியீரா ஆகியோர் பங்கேற்கின்றனர். தவிர, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, நைஜீரியா துணை அதிபர் காஷிம் ஷெட்டிமா, கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் பாரில்லா, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ், வியட்நாம் பிரதமர் லே மிங் ஹங், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளரர்களாக பங்கேற்கின்றனர். ‘திருக்குறள்’ பரிசளிப்பு ரஷ்ய அதிபர் புடினை நேற்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அவருக்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசளித்தார். இந்திய தத்துவங்கள் பல நுாற்றாண்டுகளாக ரஷ்ய எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் ஈர்த்து வந்துள்ள நிலையில், திருக்குறளுக்கும், ரஷ்யாவிற்கும் உள்ள நீண்டகால, அதிகம் அறியப்படாத தொடர்பின் காரணமாக இந்த பரிசு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘ரஷ்ய அதிபர் புடினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். எல்லைகள், மொழிகளை கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தை இந்த புத்தகம் பறைசாற்றுகிறது. இது, இரு தரப்பு மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும்’ என, குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தன் உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுவதையும், வெளிநாட்டு தலைவர்களுக்கு அதன் மொழிபெயர்ப்புகளை பரிசளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். ‘லட்சியங்களை செயல்களாக மாற்றுங்க’ ‘பிரிக்ஸ்’ வணிக மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: உலகளாவிய புதுமைகள் மற்றும் தீர்வுகளுக்கான முக்கிய மையமாக, ‘பிரிக்ஸ்’ உருவெடுத்து வருகிறது. கூட்டமைப்பின் லட்சியங்களை செயல்களாகவும், கூட்டு வலிமையை உலகளாவிய தீர்வுகளாகவும் மாற்றுவோம். பிரிக்ஸ் முன்னேறி சென்று, உலகையும் முன்னோக்கி அழைத்துச் செல்லட்டும். உலகம் முழுதும் வர்த்தக தடைகள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார பாலங்களை இந்தியா அமைத்து வருகிறது. கடல்வழி பாதைகள் பாதுகாப்பாகவும், வினியோக பாதைகள் திறந்த நிலையிலும், மாலுமிகள் பாதுகாப்பாகவும் இருக்கும் போது மட்டுமே, சர்வதேச வர்த்தகம் முன்னேற முடியும். அதனால் தான், கடல்சார் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில், ‘‘உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தியாக இந்தியா திகழ்கிறது,’’ என்றார்.