ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பீஹார் ரவுடி டில்லியில் கைது
புதுடில்லி: பீஹாரில், மாமூல் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரவுடியை டில்லி போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலம் சீதாமர்ஹியைச் சேர்ந்தவர் விஜய் குமார் மஹ்தோ என்ற விஜய் மெஹ்தோ,27. பல குற்றச் செயல்களை செய்து வந்த இவர், வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார். கடந்த, 2020ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, கூட்டாளிகளுடன் சென்ற மஹ்தோ, மாமூல் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளர் அனில் என்பவரை சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிதாமர்ஹி நீதிமன்றம், விஜய் குமார் மஹ்தோவுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2021ல் தீர்ப்பளித்தது. ஆனால், மஹ்தோ தலைமறைவானார். இதையடுத்து, கடந்த செப்டம்பரில் மஹ்தோவை கைது செய்து சிறையில் அடைக்க வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பீஹார் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், டில்லியில் மஹ்தோ பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் டில்லி போலீஸ் உதவியுடன், 24ம் தேதி அதிகாலையில் விஜய் குமார் மஹ்தோவை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பீஹாரின் சிதாமர்ஹி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் பல குற்றங்களைச் செய்துள்ள மஹ்தோ மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வியாபாரிகள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின், தலைமறைவான மஹ்தோ, பீஹார் மற்றும் டில்லி இடையே அடிக்கடி பயணம் செய்து தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். டில்லியில் உள்ள அவரது கூட்டாகள் குறித்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.