இருக்கும் இடம் தெரியாமல் போன பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா
பெங்களூரு நகரில் உள்ள முக்கிய தொகுதிகளில், ராஜ ராஜேஸ்வரி நகர் எனும், ஆர்.ஆர்.நகரும் ஒன்று. இத்தொகுதியின் எம்.எல்.ஏ., - பா.ஜ., வின் முனிரத்னா.இவர், முன்பு காங்கிரசில் இருந்தார். 2019ல் காங்., - ம.ஜ.த., கூட்டணி ஆட்சிக்கு எதிராக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த 17 பேரில் இவரும் ஒருவர்.இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, தோட்டக்கலை அமைச்சரும் ஆனார்.காங்கிரசில் இருந்தபோது துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பா.ஜ.,வுக்கு வந்த பின், சகோதரர்களை எதிர்த்து அரசியல் செய்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின், பா.ஜ.,வின் சில தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மீண்டும் காங்கிரஸ் பக்கம் தாவ நினைத்தார். ஆனால் சிவகுமார், சுரேஷ் விடவில்லை. 99,000 ஓட்டு
'எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க மாட்டோம்; எம்.எல்.சி., ஆக்குகிறோம்' என, சிவகுமார் கூற, அதற்கு முனிரத்னா ஒப்புக் கொள்ளவில்லை.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுரேஷ் தோற்றார். அவரது தோல்விக்கு முனிரத்னாவும் முக்கிய காரணம். அவரது ஆர்.ஆர்.நகர் தொகுதியில், காங்கிரசை விட பா.ஜ.,வுக்கு 99,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்தன.சுரேஷ் தோற்றுப் போனதால் அவரை சீண்டி பார்க்கும் விதமாக, முனிரத்னா சில வார்த்தைகளையும் விட்டார். இது சிவகுமார், சுரேஷை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. முனிரத்னாவை அடக்குவதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தனர். எச்.ஐ.வி.,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, முன்னாள் கவுன்சிலர், கான்ட்ராக்டர் ஆகியோரை ஜாதியை சொல்லி ஆபாசமாக திட்டிய வழக்கில், முனிரத்னா கைது ஆனார். அந்த வழக்கில் ஜாமின் கிடைத்து வெளியே வருவதற்குள், ஒரு பெண் அளித்த பாலியல் புகாரிலும் கைது செய்யப்பட்டார்.தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த, எச்.ஐ.வி., பாதித்த பெண்களை வைத்து, ஹனிடிராப் செய்ததாகவும், எச்.ஐ.வி., பாதித்தவரின் ரத்தத்தை எடுத்து, அரசியல் எதிரிகள் உடலில் பரப்பி விட்டதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.பாலியல் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பின், வீட்டிற்குள்ளேயே முனிரத்னா முடங்கிவிட்டார். அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.லோக்சபா தேர்தலின்போது பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்ட ராம்நகரின் சென்னப்பட்டணாவிலும் முனிரத்னா தீவிர பிரசாரம் செய்தார். தற்போது சென்னப்பட்டணாவில் நடக்கும் இடைத்தேர்தலில், அவர் பிரசாரத்திற்கு வரவில்லை. உண்மையை சொல்லப் போனால், பிரசாரத்திற்கு வரும்படி அவரை யாரும் அழைக்கவே இல்லை.பாலியல் வழக்கில் சிக்கியதால், சொந்த கட்சித் தலைவர்களும் அவருக்கு ஆதரவாக இல்லை என்று சொல்லப்படுகிறது. பதவி கையில் இருக்கிறது என்று ஆட்டம் போட்டால் இப்படி தான், இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டும் என, முனிரத்னா குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.பாலியல் வழக்கால் தன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டதாக, ஆதரவாளர்களிடம் முனிரத்னா புலம்பி வருகிறார். - நமது நிருபர் -