பெங்களூரு: ''பென்ஷன் பணம் வாங்க, மூதாட்டி ஒருவர், ஐந்து கி.மீ., தவழ்ந்து தபால் நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரசுக்கு இரக்கம் இல்லையா,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.தாவணகெரே மாவட்டம், ஹரிஹரின் குனிபெலகெரே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனது முதியோர் பென்ஷன் தொகையை வாங்க, ஆறு கி.மீ., தொலைவில் உள்ள தபால் நிலையத்துக்கு, தவழ்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.இது தொடர்பாக, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:மூதாட்டி ஒருவர், தனது ஓய்வூதிய பென்ஷன் வாங்க ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள தபால் நிலையத்துக்கு தவழ்ந்து செல்கிறார். அவரது பரிதாப நிலை எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.வாக்குறுதிகள் மூலம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக, கர்நாடக அரசு கூறுகிறது. ஆனால், மக்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதற்கு இந்த காட்சியே சாட்சியாக உள்ளது.நான் முதல்வராக இருந்தபோது, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், பணிப்பெண்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு நலிவடைந்த மக்களுக்கு, பல திட்டங்களை வழங்கி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்தேன்.முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை உயர்த்தி உள்ளேன். துன்பத்தில் இருப்போருக்கு உதவுவது ஆட்சியாளரின் கடமை. இவரை போன்று எண்ணற்ற வயதான பெண்களின் நிலை என்ன. அரசுக்கு இரக்கம் இல்லையா.மாநில அரசு, வாக்குறுதிகளை அமல்படுத்தி உள்ளது மகிழ்ச்சி. இருப்பினும், ஏழை, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு உதவும் முதியோர், விதவை ஓய்வூதியம் குறித்த நேரத்தில், அவர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்.இதுபோன்ற காட்சி இனி வரும் நாட்களில் வரக்கூடாது. அந்த மூதாட்டிக்கு உடனடியாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, காங்கிரஸ் அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.15_DMR_0004சாலையில் தவழ்ந்துபடி சென்ற மூதாட்டி.படம்: குமாரசாமி