ஓரினசேர்க்கைக்கு மறுத்த நண்பரை கொலை செய்த கார் டிரைவர் கைது
மாதநாயக்கனஹள்ளி: ஓரினசேர்க்கைக்கு மறுத்த நண்பரை, கட்டையால் அடித்துக் கொலை செய்த, கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே கோவி திம்மனபாளையா கிராமத்தில் வசித்தவர் பிரதீப், 41. இவருடன் நண்பரும், கார் டிரைவருமான சேத்தன், 30 என்பவர் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிரதீப் இறந்து கிடந்தார். சேத்தன் மாயமாகி இருந்ததால், அவர் தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.பிரதீப்புக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், இருவரும் பிரிந்தனர். இதனால் அவர் மட்டும் தனியாக வசித்தார். அவருக்கு சேத்தனுடன் பல ஆண்டுகளாக நட்பு இருந்தது.கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று வந்த சேத்தன், பின் வாடகை கார் ஓட்டினார். அவருக்கு வீடு இல்லாததால் தன் வீட்டிலேயே, பிரதீப் தங்கவைத்து இருந்தார். அவர்கள் இருவரும் தினமும் ஒன்றாக மது அருந்துவர்.குடிபோதையில் இருக்கும்போது வீட்டிற்குள்ளேயே, பிரதீப் இயற்கை உபாதை கழித்துள்ளார். இது சேத்தனுக்கு பிடிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த 19ம் தேதி இரவு, இருவரும் குடிபோதையில் இருந்தனர். அப்போது ஓரினசேர்க்கைக்கு வரும்படி, பிரதீப்பை, சேத்தன் அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டார். கோபம் அடைந்த சேத்தன், பிரதீப்பின் மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுவைத்ததுடன், மரக்கட்டையால் அடித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். பிரதீப் அலறும் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதால், வீட்டின் 'டிவி' சத்தத்தை அதிகமாக வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.