உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நானோ கார் விற்பனை: நேரில் டாடா பார்வை

நானோ கார் விற்பனை: நேரில் டாடா பார்வை

விஜயவாடா : பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா, தனது நிறுவனத்தின் தயாரிப்பான நானோ கார்களை வாங்கியவர்களை நேரில் சந்தித்து, நானோ காரின் சாவிகளை, காரின் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமான நானோ கார் விற்பனை வளர்ச்சியை, அவரே நேரில் கண்காணித்து வருகிறார். சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு லட்ச ரூபாய் முதலீட்டில் கார் கிடைக்கும் என்ற திட்டம் இது. ஆகவே, நானோ காரின் உற்பத்தியை அதிகரிப்பதை தனது வெற்றியாகக் கருதும் ரத்தன் டாடா, ஆந்திராவில் விஜயவாடா பகுதியில், நானோ காரை வாங்கிய வாடிக்கையாளர்களை நேற்று முன்தினம் (சனியன்று) சந்தித்து, குறைகளைக் கேட்ட அவர், கார் விற்பனைக்கான பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார். விஜயவாடா நகரில் உள்ள டாடா குழுமத்தின் விற்பனைக் கிளையான ஜாஸ்பர் இண்டஸ்ட்ரீஸ் சார்பில், கடந்த இரண்டு வாரங்களில் 234 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன. கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்துப் பேசிய ரத்தன் டாடா, 234 பேரையும் நிகழ்ச்சி மேடைக்கு அழைத்து, கார் சாவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரத்தன் டாடா கூறியதாவது : நானோ கார்களை தயாரிப்பதற்கு எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சாதாரண நடுத்தர குடும்பங்களின் தேவையைக் கருதி இந்த காரை உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது, நானோ கார் தயாரிப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எனக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு டாடா கூறினார். டிராபிக் நெரிசல்: நானோ கார் விற்பனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன் முறையாக விஜயவாடா நகருக்கு வந்த அவர், டிராபிக் நெரிசலில் சிக்கிக் கொண்டார். லாரி வேலை நிறுத்தத்தின் காரணமாக இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான லாரி, கார் மற்றும் இதர வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், ரத்தன் டாடா பயணம் செய்த காரும் நடுவழியில் சிக்கிக் கொண்டது. அவரது கார் நகர முடியாத நிலை ஏற்பட்டதால், 45 நிமிட நேரம் தன் காரில் நேரத்தைக் கழித்தார். பின்னர், வேறு கார் மூலம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை