வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உயிர் போச்சுன்னா அரசின் அலட்சியம்னு ஒப்பாரி வைப்போம்.
எவனோ ஒரு அரை வேக்காடு துப்பாக்கி போன்ற ஆயுதம் தயாரித்து இருக்கிறான்...
அரசு அதிகாரிகள் குறட்டை விட்டதால் வந்த தவறு இது
போபால்: மத்திய பிரதேசத்தில், தீபாவளி பண்டிகையின் போது புதிய ரக, 'கார்பைடு துப்பாக்கி' பட்டாசு வெடித்ததில், 14 குழந்தைகளின் கண் பார்வை பறிபோனது; 125க்கும் மேற்பட்டோர் முகத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுதும், தீபாவளி பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேசத்தில் பல்வேறு புதிய ரக பட்டாசுகள் உள்ளூர் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில், 'கார்பைடு துப்பாக்கி' எனப்படும், 'பிளாஸ்டிக் பைப்'பினால், கார்பைடு உலோக கலவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெடியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 150 - 200 ரூபாய் வரை விற்கப்பட்டதால், ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். துப்பாக்கி வடிவில் இருந்ததால், குழந்தைகளும் பெரிதும் விரும்பினர். ஒரு சிலர், சமூக வலைதளங்களை பார்த்து சொந்தமாகவே இந்த துப்பாக்கியை தயாரித்தனர். இந்நிலையில், இதை பயன்படுத்திய சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட பலரின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு முகத்தில் காயங்களும் ஏற்பட்டன. அதிர்ச்சி கடந்த மூன்று நாட்களில் மட்டும், மத்திய பிரதேசம் முழுதும் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக, 125 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 14 குழந்தைகளின் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் போபால், இந்துார், ஜபல்பூர், குவாலியரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், 8 - 14 வயது வரையிலான குழந்தைகளே, கார்பைடு துப்பாக்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனோர், விதிஷா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மட்டும், 72 மணி நேரத்தில், 26 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 20 - 30 சதவீதத்தினரின் கண்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஹமீதியா மருத்துவ மனையின் கண் சிகிச்சை பிரிவு டாக்டர் மணீஷ் சர்மா கூறுகையில், ''கார்பைடு துப்பாக்கி என்பது பொம்மை பொருளல்ல. இது, வெடிமருந்து நிரப்பப்பட்ட வெடிபொருள். இது, கண்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. '' இதில் இருந்து வெளியேறும் உலோக துண்டுகள், கார்பைடு நீராவிகள், கண்களின் விழித்திரையை எரிக்கும் தன்மை கொண்டவை. தற்போது சிகிச்சையில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கண்களில் உள்ள விழித்திரை கிழிந்துள்ளது. இதனால், பலருக்கும் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது,'' என்றார். இந்த கார்பைடு ரக துப்பாக்கி விற்பனைக்கு வருவதை அறிந்த மத்திய பிரதேச அரசு, மாநிலம் முழுதும் கடந்த, 18ம் தேதியே தடை விதித்திருந்தது. இருந்தும், பலர் அதை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை தேடி வரும் போலீசார், கார்பைடு துப்பாக்கியை விற்றவர்கள் மற்றும் விளம்பரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அலட்சியம் சமீபகாலமாக, 'யு டியூப், இன்ஸ்டா' போன்ற சமூக ஊடகங்களில், இந்த கார்பைடு துப்பாக்கியை வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சுடும் சவால்கள் அதிகரித்த நிலையில், அதை பார்த்து குழந்தைகள் உள்ளிட்டோர் இந்த துப்பாக்கியை தயாரித்தும், வாங்கியும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்த குழந்தைகளின் பெற்றோர், இந்த பட்டாசுக்கு தடை விதிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மாபாத் கிராமத்தில் குர்நாம், சத்நாம் சிங் சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு அவர்களால் பட்டாசு வாங்க முடியவில்லை. இதனால், வருத்தமடைந்த அவர்களின் மகன்களான மன்ப்ரீத் மற்றும் லவ்ப்ரீத் சிங் ஆகியோர் சொந்தமாக பட்டாசு தயாரிக்க முடிவு செய்தனர். தீபாவளி அன்று, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரும்பு பைப் மற்றும் வெடிபொருட்களை வைத்து பட்டாசு தயாரிக்கும் போது, அவை திடீரென வெடித்து சிதறின. இதில், மன்ப்ரீத், 19, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த லவ்ப்ரீத் சிங், அமிர்தசரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில், குடும்ப உறுப்பினர்களில், மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதில், ஒருவருக்கு இரு கைகள் துண்டாகின. மற்றொருவருக்கு பார்வை பறிபோனது. மூன்றாவது நபருக்கு தாடை கிழிந்தது. மேலும் இருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
'பிளாஸ்டிக்' அல்லது இரும்பு 'பைப்'புகளை சேர்த்து துப்பாக்கி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில், 'காஸ் லைட்டர், கால்சியம் கார்பைடு' ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 'கால்சியம் கார்பைடு'டன் தண்ணீர் சேரும் போது, அது 'அசிட்டிலீன்' வாயுவை வெளியேற்றுகிறது. இது, ஒரு தீப்பொறியுடன் இணையும் போது, பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். அப்போது, பைப்பில் உள்ள உலோக குண்டுகளின் கலவை, துகள்களாக வெளியேறுகின்றன. அவை, முகத்தில் பட்டால் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் நெருப்பு துகள்கள் தோலை எரித்து கண்களுக்கு தீக்காயங்களை ஏற்படுத்துகின்றன. இதனால், பார்வைத்திறன் பாதிக்கப்படும். அதேபோல், துப்பாக்கியில் இருந்து வெளியேறும் அசிட்டிலீன் வாயு, கண்களில் காயத்தை ஏற்படுத்தி எரிச்சலை ஏற்படுத்தும். இதனால், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்னை கூட ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உயிர் போச்சுன்னா அரசின் அலட்சியம்னு ஒப்பாரி வைப்போம்.
எவனோ ஒரு அரை வேக்காடு துப்பாக்கி போன்ற ஆயுதம் தயாரித்து இருக்கிறான்...
அரசு அதிகாரிகள் குறட்டை விட்டதால் வந்த தவறு இது