உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ நடமாட்டம் தொடர்பான செய்திகள்: டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ராணுவ நடமாட்டம் தொடர்பான செய்திகள்: டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டங்கள் ஆகியவற்றை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கும்படி அனைத்து தொலைகாட்சி சேனல்களும் அறிவுறுத்தப்படுகின்றன. 'பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அரசால் நியமிக்கப்படும் சிறப்பு அதிகாரி தரக்கூடிய செய்திகள், விளக்கங்கள் ஆகியவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்' என, ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, அதற்கென்று விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறையில் உள்ளன.

கவனம் தேவை

தேசிய பாதுகாப்பை கருத்தில் வைத்து, செய்தி நிறுவனங்கள், ஊடக தளங்கள் ஆகியவை மட்டுமல்லாது சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நேரலை, பதற்றமான காட்சிகள் மற்றும் தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து பெறப்படுவதாக கூறப்படும் செய்திகள் ஆகியவற்றை வெளியிடும்போது மிகவும் கவனம் தேவை.மிக மிக உணர்வுப்பூர்மான அல்லது தீவிரமான தகவல்களை உண்மைக்கு மாறாக வெளியிட்டால், அது பகைவர்களுக்கு துணைபுரிவதுபோல ஆகிவிடும். பாதுகாப்பு படையினரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் ஆகிவிடும்.கார்கில் போர், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம், காந்தஹார் விமான கடத்தல் போன்ற சம்பவங்களின்போது கட்டுப்பாடற்ற வகையில் செய்திகளை வெளியிட்டதால், தேசிய பாதுகாப்பில் தேவையற்ற பாதகமான சங்கடங்கள் ஏற்பட்டன.

சமரசம்

இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றாலும், நாம் அனைவருக்குமே மிகுந்த தார்மிக பொறுப்புணர்வு உள்ளது. அவ்வாறு இருப்பதன் வாயிலாக, தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் நம் படை வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை சமரசம் செய்து கொள்ளாமல் தவிர்க்கலாம்.எனவே, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டங்கள் ஆகியவற்றை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கும்படி அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அறிவுறுத்தப்படுகின்றன.ஊடகங்களின் ஒளிபரப்பு மற்றும் செய்தி வெளியீடுகள் அனைத்தும், கட்டுப்பாட்டுடன் செயல்படும் வகையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடையும் வரை, அரசால் நியமனம் செய்யப்படும் சிறப்பு அதிகாரி ஒருவர், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை தரக்கூடிய செய்திகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்.எனவே, இதில்சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருமே மிகுந்த விழிப்புடன், உரிய பொறுப்புடன் உணர்வுப்பூர்வமான தங்களின் பங்களிப்பை, தேசிய நலன் கருதி அளித்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது - நமது டில்லி நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை