புதுடில்லி: கடந்த 2022ல் தமிழகத்தின் கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இரு பயங்கரவாதிகளை சேர்த்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை நேற்று(ஜன.,24) தாக்கல் செய்தது.தமிழகத்தின் கோவையை அடுத்த உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த 2022, அக்., 23ம் தேதி கார் குண்டு வெடித்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்பவர் பலியானார். தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான இவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cbxxas65&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 தீவிர சோதனை
அவர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 'பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர்' உட்பட, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான சில மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.என்.ஐ.ஏ., நடத்திய தொடர் விசாரணையில், உயிரிழந்த முபீனுக்கு உதவியாக இருந்த கோவை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த உமர் பாரூக், ஷேக் ஹிதயதுல்லா, பெரோஸ், இஸ்மாயில், சனோபர் அலி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது, 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேரின் பெயர்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் என்.ஐ.ஏ., தாக்கல் செய்தது.இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது இத்ரிஸ் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. விசாரணை
முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகமது அசாருதீன் என்ற அசார், வேறொரு பயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.கடந்த 2019ல் நம் அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், முபீனின் நெருங்கிய நண்பரான முஹமது இத்ரிஸ் என்பவர் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பில் பயன்படுத்திய காரை வாங்க முபீனுக்கு உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இவர்கள் இருவரும், குண்டுவெடிப்பில் பலியான முபீனை சந்தித்து குண்டுவெடிப்பு தொடர்பான திட்டத்தை வகுத்ததும், இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, முகமது அசாருதீன், முகமது இத்ரீஸ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்ட துணை குற்றப்பத்திரிகையை தயாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.