உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனை எம்.பி.,யாக்க முதல்வர் தந்திரம்; ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனை

மகனை எம்.பி.,யாக்க முதல்வர் தந்திரம்; ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனை

லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், மகன் யதீந்திராவை களமிறக்க, முதல்வர் சித்தராமையா தீவிரமாக வேலை செய்து வருகிறார்.கர்நாடகா முதல்வர் சித்தராமையா மைசூரு அருகே சித்தராமயனஹுன்டி கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமம் வருணா சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது. இந்த தொகுதியில் இருந்து 2008, 2013ல் சித்தராமையா வெற்றி பெற்றார். கடந்த 2018 தேர்தலில் மகன் யதீந்திராவுக்காக வருணா தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு, பாதாமி தொகுதிக்கு சென்று, அங்கு வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், 'பாதுகாப்பான தொகுதி'யை சித்தராமையா தேடினார். வருணா தொகுதியை தந்தைக்காக, மகன் யதீந்திரா விட்டுக்கொடுத்தார்.மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வரும் லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட வைக்க, சித்தராமையா முடிவு செய்து உள்ளார். இதற்காக காய் நகர்த்தியும் வருகிறார்.

முதல்வரின் கணக்கு

மைசூரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு மடிகேரி, விராஜ்பேட், பிரியாபட்டணா, ஹுன்சூர், சாமுண்டீஸ்வரி, கிருஷ்ணராஜா, சாமராஜா, நரசிம்மராஜா என எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

ஆதரவு

இதில் ஐந்து தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரஸ்காரர்கள். இதனால் யதீந்திரா போட்டியிட்டால் அவரை எளிதாக வெற்றி பெற வைக்கலாம் என்பது, முதல்வரின் கணக்காக உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் மைசூரு சென்ற முதல்வர் சித்தராமையா, இன்னாள், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களை அழைத்து யதீந்திராவை போட்டியிட்ட வைப்பது குறித்து ஆலோசனை கேட்டு உள்ளார். இதில் பெரும்பாலோனார் யதீந்திரா போட்டியிட ஆதரவு தெரிவித்து உள்ளனர்.ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், யதீந்திரா வெற்றிபெறும் சூழ்நிலை தற்போது இல்லை. அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதையடுத்து தொகுதி வாரியாக காங்கிரசின் நிலைமை எப்படி உள்ளது என்று, தனது நம்பிக்கையானவர்கள் மூலம் சித்தராமையா கணக்கெடுக்கிறார்.

ஹாட்ரிக் வெற்றி

மைசூரு தொகுதி எம்.பி.,யாக இருக்கும் பிரதாப் சிம்ஹா, பா.ஜ.,வை சேர்ந்தவர். கடந்த 2014, 2019 தேர்தலில் வெற்றி பெற்றார். 'ஹாட்ரிக்' வெற்றியை எதிர்பார்த்து உள்ளார். ஆனால் தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், பத்து வழிச்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு, அவர் கொடுத்த மோசமான ஐடியாக்கள் காரணம் என்றும், காங்கிரஸ் கூறி வருகிறது.இது தவிர சமீபத்தில் பார்லிமென்டில் சிலர் அத்துமீறி புகுந்து, வண்ண புகையை பரவ விட்டனர். அதில் ஒருவருக்கு, பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்து இருந்தார். இதனால் அவர் மீது பா.ஜ., மேலிடம் அதிருப்தி அடைந்தது. வரும் தேர்தலில் அவருக்கு 'சீட்' கிடைக்குமா என்று உறுதியாக தெரியவில்லை.எது எப்படியோ சொந்த ஊர் தொகுதியை கைப்பற்ற, முதல்வர் சித்தராமையாவும், மீண்டும் வெற்றி பெற பா.ஜ.,வும் முனைப்பு காட்டுவதால், லோக்சபா தேர்தலின் போது மைசூரு தொகுதியில் அனல் பறப்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை