திருச்சூர் நகரில் வலம் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
பாலக்காடு; கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கேரள மாநிலம் திருச்சூர் நகரில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வலம் வந்தது மக்கள் மனதை கவர்ந்தது.கேரள மாநிலம் திருச்சூர் நகரில் நேற்று மாலை மறை மாவட்டம் மற்றும் 'பவ்ராவலி' என்று அழைக்கப்படும் மக்கள் கூட்டமைப்பும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நேற்று நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்துள்ள பேரணி மக்கள் மனதை கவர்ந்தது.மாலை, 5:00 மணிக்கு செயின்ட் தாமஸ் கல்லூரியில் துவங்கிய பேரணியை, வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து, பேராயர் மார் ஆண்ட்ரூஸ் மற்றும் திருச்சூர் மேயர் வர்க்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். பலூன் வீசி, ஆடல், பாடல்களுடன், கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து பேரணி நடந்தது.பேரணியில், சிறுவர் பெரியவர் வரையிலான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து உலா வந்தனர். 50 மாற்றுத்திறனாளிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.இதை காண எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசியல், சமூக மற்றும் கலாச்சார தலைவர்கள் திரண்டு வந்தனர். இதனால் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.