| ADDED : டிச 04, 2025 11:16 AM
புதுடில்லி: நேரு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் அதனை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பார்லி குளிகால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே வருகை தந்தார். அப்போது, பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்கள் பணத்தை பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் நேரு விரும்பியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார்.கார்கே பேசியதாவது; நேரு பேசியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை வெளியிடுங்கள். அதன்பிறகு, அதை எங்கு வேண்டுமானாலும் பரப்புங்கள். ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வரும் நிலையில், இந்தியா தன்னுடைய சவுகரியத்திற்கு ஏற்றவாறு, லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். யாருடைய அழுத்தத்தின்படியும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்யக் கூடாது. நாட்டின் நலனுக்காக அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். மத்திய அரசின் கொள்கையின் காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு இழந்து வருகிறது. சிறப்பான கொள்கைகளை வகுத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். நமது பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நாம் நமக்குள் என்ன வேண்டுமானாலும் சொல்லி பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், உலகளவில் இந்தியா ரூபாய்க்கு எந்த மதிப்பும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.