உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் முன் பாய்ந்து கான்ட்ராக்டர் தற்கொலை பிரியங்க் கார்கே ஆதரவாளர் மீது குற்றச்சாட்டு

ரயில் முன் பாய்ந்து கான்ட்ராக்டர் தற்கொலை பிரியங்க் கார்கே ஆதரவாளர் மீது குற்றச்சாட்டு

பீதர்: அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் தொல்லை கொடுப்பதாக கூறி, ஏழு பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, இளம் கான்ட்ராக்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.பீதர், பால்கி கட்டிடுங்காவ் கிராமத்தில் வசித்தவர் சச்சின் மோனப்பா பஞ்சால், 26; கான்ட்ராக்டர். இவருக்கும், கலபுரகி மாநகராட்சி முன்னாள் உறுப்பினரும், கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கேயின் ஆதரவாளருமான ராஜு கப்பனுாருக்கும் இடையில், சில மாதங்களுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டது. அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் டெண்டர் வாங்கி தருவதாக கூறி, சச்சினிடம் இருந்து ராஜு கப்பனுார் 15 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் டெண்டர் வாங்கி தரவில்லை; வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.

ராஜினாமா

மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு, சச்சினுக்கு, ராஜு கப்பனுார் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சச்சின் நேற்று மதியம், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதி வைத்துள்ள ஏழு பக்க கடிதத்தில், 'என் சாவுக்கு ராஜு கப்பனுார், அவரது ஆதரவாளர்கள் நந்தகுமார் நாகபுஜங்கே, கோரக்நாத் உள்ளிட்ட ஆறு பேர் தான் காரணம்' என்று கூறப்பட்டு இருந்தது. சச்சின் தற்கொலை குறித்து, பீதர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் அஸ்வத் நாராயணா கூறுகையில், ''பால்கி கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கில், அமைச்சர் பிரியங்க் கார்கே நெருங்கிய ஆதரவாளர் பெயர் அடிபடுகிறது. ''பிரியங்க் கார்கே அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்க கூடியவர். கான்ட்ராக்டர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின், 'எக்ஸ்' வலைதள பதிவில், 'சமீபத்தில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உதவியாளர் கொடுத்த தொல்லையால், அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். 'இப்போது பிரியங்க் கார்கே ஆதரவாளர் கொடுத்த தொல்லையால் இளம் கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை செய்து உள்ளார். காங்கிரஸ் அரசின் ஆறாவது வாக்குறுதி தற்கொலை. பிரியங்க் கார்கே பதவி விலகும் வரை போராடுவோம்' என தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை உறுதி

பிரியங்க் கார்கே அளித்த பேட்டியில், ''கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ராஜு கப்பனுார் என் ஆதரவாளராக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ''என் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒப்பந்தம் எடுத்து தருவதாக கூறி, ராஜு கப்பனுார் பணம் வாங்கியதாக சொல்கின்றனர்.''இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடுவேன். யாரையும் காப்பாற்றும் அவசியம் இல்லை. உண்மை வெளிவரட்டும். உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு நானே கோரிக்கை வைப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை