புதுடில்லி:டில்லியில் விரைவில், 70 புதிய ஆரோக்கிய ஆயுஷ்மான் மந்திர்கள் எனப்படும், அதிநவீன மருத்துவமனைகள் துவக்கப்பட உள்ளன. விரைவில் இதன் எண்ணிக்கை, 200ஐ அதிகரிக்க உள்ளன என கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆம் ஆத்மி அரசில், மொஹல்லா கிளினிக் என்ற பெயரில், நகரில் ஆங்காங்கே மருத்துவ சிகிச்சை அளிக்கும் இலவச கிளினிக்குகள் துவக்கப்பட்டன. அந்த இடங்களில் குறைவான மருத்துவ வசதிகளே அளிக்கப்படுகின்றன என கூறி, கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த, பா.ஜ., அரசு, 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என்ற பெயரில், சொந்த கட்டடத்தில் மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்தது. இந்த வளாகத்தில், நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வித சிகிச்சைகளும், சில குறிப்பிட்ட ஆப்பரேஷன்களும் கூட, மருத்துவ வசதிகளுடன் செய்யப்பட்டன. இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை, சமுதாயத்தின் ஆரோக்கிய நலம் காக்கும் முதுகெலும்புகள் என குறிப்பிடும் இப்போதைய அரசு, இப்போது வரை, 168 ஆரோக்கிய மந்திர்களை செயல் படுத்தி வருகிறது. இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ்குமார் சிங் கூறும் போது,''புதிதாக, 70 ஆரோக்கிய மந்திர்களை துவக்க உள்ளோம். மக்களின் வீட்டு வாசலில் அமைக்கப்படும் இந்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ''இதன் மூலம், டில்லி மக்கள் துாரம், பணம் போன்றவற்றின் அடிப்படையில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ''அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த கூடுதல் மையங்கள் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்கிறோம். டில்லி நகர மக்களின் அன்றாட மருத்துவ தேவைகளுக்கு இந்த மையங்கள் உதவியாக இருக்கும்,'' என கூறியுள்ளார். இப்போதைய, ஆரோக்கிய ஆயுஷ்மான் மந்திர்களில் நவீன மருத்துவ வசதிகளுடன் இலவச மருந்துகள், இலவசமாக நோய் பரிசோதனை கூடம், தாய் - சேய் நலம், மூத்த குடிமக்கள் ஆரோக்கியம், மனநல பரிசோதனைகள், பல் நோய் சிகிச்சை போன்றவை அளிக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்பட உள்ள ஆரோக்கிய மந்திர்கள் கிஜ்ராபாத், நேரு பிளேஸ், ஓக்லா, தார்யா கஞ்ச், கவுதம் நகர், ஹாஸ் காஸ், ஷாபூர், புராரி, ஜஹாங்கிர்புர் மற்றும் பல இடங்களில் அமைய உள்ளன.