| ADDED : ஜன 30, 2025 08:27 PM
புதுடில்லி: டில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகார் அடிப்படையில் சோதனை செய்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். டில்லியில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஆம்ஆத்மி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் கபூர்தலா இல்லத்தில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், அவரது இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது.டில்லி முதல்வர் அதிஷிக்கு ஆதரவாக, பஞ்சாப் முதல்வர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த சூழலில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து அதிஷி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது: பா.ஜ.,வினர் பட்டப்பகலில் பணம், காலணிகள், பெட்ஷீட்களை விநியோகிக்கிறார்கள். அது தெரியவில்லை. மாறாக, முதல்வரின் இல்லத்திற்குச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இதற்கு பிப்ரவரி 5ம் தேதி டில்லி மக்கள் பா.ஜ.,வுக்கு பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது குறித்து பஞ்சாப் முதல்வர் கூறியதாவது: டில்லிக்குள் பா.ஜ.,வினர் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். ஆனால் டில்லி போலீசாரும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லை. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பா.ஜ.,வின் உத்தரவின் பேரில் டில்லியில் உள்ள எனது இல்லத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர், எனக் கூறியுள்ளார்.