உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருக்கு புதிய வடிவம் கொடுக்க திட்டம் துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை

பெங்களூருக்கு புதிய வடிவம் கொடுக்க திட்டம் துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட் முன்னேற்பாடு தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் பெங்களூரு விகாஸ் சவுதாவில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் சிவகுமார் பேசியதாவது:பெங்களூருக்கான வளர்ச்சித் திட்டங்களை, பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். நகரின் சில பகுதிகள் மட்டுமே, வளர்ச்சி அடைந்துள்ளன. மற்ற பகுதிகள் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. எனவே பெங்களூருக்கு புதிய வடிவம் கொடுக்க, முடிவு செய்துள்ளோம்.குடிநீர், போக்குவரத்து நெருக்கடி, திடக்கழிவு அகற்றுவதில் பிரச்னை உள்ளது. 2013 முதல் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தாமாக முன் வந்து சொத்து விபரங்களை தெரிவிக்கும் நடைமுறையில், சரியான அளவில் வரி வசூலாகவில்லை. நான் ஆய்வு நடத்தியபோது, 50க்கும் மேற்பட்டோர் சரியாக சொத்து வரி செலுத்தவில்லை.

*ஆவணங்கள் 'ஸ்கேன்'

எனவே பெங்களூரில் உள்ள சொத்துகளின் ஆவணங்கள் 'ஸ்கேன்' செய்யப்படுகிறது. 2020ல் சொத்து வரி சட்டத்தின் திருத்தம் செய்ததால், அபராதம் அளவு அதிகரித்துள்ளது.இது பற்றி யாரும் கவனிக்கவில்லை. இந்த அபராதத்தை மக்கள் செலுத்துவது கஷ்டம். எனவே சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அனைத்து பிரச்னைகளும் ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சிப்போம்.பிரச்னைகளை ஒரே முறையில், தீர்த்து வைக்க பி.டி.ஏ., குடிநீர் வாரியம், பெஸ்காம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் விஷயத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, 6 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் வினியோகிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பிரதமரிடம் முறையீடு

சட்டவிரோத பிளக்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், எங்களுக்கும் அபராதம் விதித்துள்ளனர். எந்த கட்சி, தலைவர்கள் விதிமீறலாக பிளக்ஸ் பொருத்தினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.பெங்களூரில் மாநகராட்சி கவுன்சிலராக, எம்.எல்.ஏ.,வாக, அமைச்சராக பணியாற்றிய உங்களிடம் ஆலோசனை கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு முன் திட்ட ஆணையத்தில் நிதி ஒதுக்கினர். ஆனால் நிதி வரவில்லை. பெங்களூருக்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்க நேரம் ஒதுக்கும்படி கோரியுள்ளோம்.இதற்கு முன்பு மத்திய அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். நீங்கள் கூட்டத்தில் வாய் மொழியாகவும், ஆலோசனைகளை கூறலாம். எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம். அதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ