உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு ரூரலில் தேவகவுடா மருமகன் போட்டி!: பா.ஜ., மேலிட உத்தரவுப்படி மஞ்சுநாத் களமிறக்கம்

பெங்களூரு ரூரலில் தேவகவுடா மருமகன் போட்டி!: பா.ஜ., மேலிட உத்தரவுப்படி மஞ்சுநாத் களமிறக்கம்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத்தை, பெங்களூரு ரூரல் தொகுதியில் களமிறக்கும்படி, பா.ஜ., மேலிட தலைவர்கள், ம.ஜ.த.,விடம் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, ம.ஜ.த., தலைவர்களுக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று நீண்ட விளக்கம் அளித்தார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ம.ஜ.த., கர்நாடகாவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.ஆனாலும், மாண்டியா, சிக்கபல்லாப்பூர், ஹாசன், கோலார் தொகுதிக்கு உட்பட்ட கட்சி பிரமுகர்களுடன், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கருத்து கேட்பு

இதற்கிடையில், நேற்று பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்ட கட்சி பிரமுகர்களுடன் பெங்., ஜெ.பி.நகரில் உள்ள தன் இல்லத்தில் குமாரசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்து, ஒவ்வொரு பிரமுகரின் கருத்து கேட்கப்பட்டது.இறுதியாக, குமாரசாமி பேசியதாவது:அனைவரும் இதற்கு முன் நடந்த கசப்பான சம்பவங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை மறந்து ஒன்றாக செயல்படுவோம். தவறுகளை திருத்தி கொள்வோம். ராம்நகர் மக்கள் எப்போதுமே ஜாதியின் அடிப்படையில் அரசியல் செய்யவில்லை. நான் என்றுமே ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்கவில்லை. தேர்தலுக்கு பின், ஊர்களில் சண்டை மூட்டி விடவில்லை.

வெற்றி நிச்சயம்

உங்களில் ஒருவனாக உழைத்து வருகிறேன். காங்கிரசார் எப்படி செயல்படுகின்றனர், நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.ஜெயதேவா இதய மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மஞ்சுநாத்தை, பெங்களூரு ரூரல் தொகுதியில் களமிறக்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்களும், மாநில தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். இதையே ம.ஜ.த., தலைவர்களும் விரும்புகின்றனர். கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக களமிறக்கினால், வெற்றி நிச்சயம் என்பது இரு கட்சி தலைவர்களின் விருப்பம்.

வீழ்த்த வேண்டும்

அவரை களமிறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, பிரமுகர்கள் ஆலோசனை கூற வேண்டும். கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சுக்கு, நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். என் தந்தை தேவகவுடாவிடம், இரண்டு மணி நேரம் ஆலோசித்து, சூழ்நிலையை அவருக்கு விளக்கியுள்ளேன்.மஞ்சுநாத்தின் மனைவியான என் தங்கையிடமும் கூறியுள்ளேன். அவரோ, எங்களை ஏன் அரசியலுக்கு இழுத்து வருகிறீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். எங்கள் வீட்டு கஷ்டம், எனக்கு தான் தெரியும். ஆனால், விரோதிகளை வீழ்த்த வேண்டும் என்பது என் குறி.இம்முறை தேர்தலை, சவாலாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். 2019ல், ராம்நகர் மக்கள், நிகிலை தோற்கடித்தனர் என்று நான் வெறுக்கவில்லை. எங்கள் தவறுகளால் தோற்றோம் என்று, திருத்தி கொள்கிறோம்.

தேவகவுடாவுக்கு மதிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, உலகமே கொண்டாடுகிறது. அதே மோடி, தேவகவுடாவை பார்த்த உடன் எழுந்து நின்று மரியாதை கொடுப்பதை அனைவரும் அறிவர். அவரது மருமகன் மஞ்சுநாத், சுகாதார துறையில் பெரிய அளவில் சாதனை புரிந்துள்ளார். அத்தகைய நபர், டில்லிக்கு சென்றால், லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் என்பது அனைவரின் நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.இதன்மூலம், தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத், பெங்களூரு ரூரல் தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை