ஆன்லைனில் புக் செய்தால் வீடருகே டெலிவரி போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது
சிம்லா: ஆன்லைன் வாயிலாக புக் செய்தால், வீட்டுக்கு அருகிலேயே குறிப்பிட்ட இடத்திற்கு போதைப் பொருட்களை அனுப்பி வைக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளனர்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் பரிமாற்றம் நடப்பது தொடர்பாக, அம்மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தும் முக்கிய குற்றவாளியான சந்தீப் ஷா என்பவர் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் கைது செய்யப்பட்டார். அவருடைய முக்கிய கூட்டாளியான நீரஜ் கஷ்யப் என்பவர் தெற்கு டில்லியின் மெஹ்ரோலியில் கைது செய்யப்பட்டார்.இது குறித்து, சிம்லா எஸ்.பி., சஞ்சீவ் குமார் காந்தி கூறியதாவது:போதைப் பொருள் தேவைப்படுவோர், ஆன்லைன் வாயிலாக புக் செய்தால் போதும். அவர்களுடன், 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படும். அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே, அவர்கள் குறிப்பிடும் இடத்துக்கு போதைப் பொருள் அனுப்பப்படும். மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்தியதுடன் போதைப் பொருள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் போதைக் கடத்தல் கும்பலில், 500க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.முக்கிய குற்றவாளியான சந்தீப் ஷா உட்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருள் கிடைக்கிறது என்பது உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.