பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி ரூ.35 கோடியை இழந்த முதியவர்
மும்பை: மஹாராஷ்டிராவில், முதியவர் ஒருவர், பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி, கடந்த நான்கு ஆண்டுகளில் 35 கோடி ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பை மாடுங்கா மேற்கு பகுதியைச் சேர்ந்த பரத் ஹரக்சந்த் ஷா, 72, என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர், குறைந்த வாடகையில் புற்றுநோயாளிகளுக்கான விடுதியை நடத்தும் தொழில் செய்து வருகிறார். பரம்பரை பங்கு ஷாவின் தந்தை, கடந்த 1984ல் இறந்தார். அப்போது அவர் வாங்கியிருந்த பங்குகள், ஷா வசம் இருந்தன. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றி அறியாததால், தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி மும்பை யில் உள்ள 'குளோப் கேபிடல் மார்க்கெட் லிமிடெட்' என்ற பங்கு வர்த்தக நிறுவனத்திடம், தன் பரம்பரை பங்குகளை கொடுத்து வர்த்தகம் செய்தார். இதற்காக ஷா பெயரிலும், மனைவியின் பெயரிலும் தனியாக 'டீமேட்' கணக்குகள் துவக்கப்பட்டன. ஷாவுக்கு உதவுவதற்காக அந்த நிறுவனம் இரண்டு பேரை நியமித்தது. அவர்கள் தொடர்ந்து நேரில் பேசியதுடன், பங்கு பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர். கடந்த 2020 மார்ச் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில், அவருக்கு ஆண்டு கணக்கு களும் அனுப்பப்பட்டன. பங்குகள் லாபம் ஈட்டுவதாக கூறப்பட்டதால், அவருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்களை, நிறுவனப் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு ஜூலையில், குளோப் கேபிடல் நிறுவனத்திடம் இருந்து ஷாவிற்கு அழைப்பு வந்தது. அப்போது ஷாவின் மனைவியின் கணக்கில், 35 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும், உடனே செலுத்தாவிட்டால் பங்குக ள் அனைத்தும் விற்கப்படும் என்றும் கூறினர். பெரும் நஷ்டம் இதையடுத்து, தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான பங்குகள் அனுமதியின்றி விற்கப்பட்டதும், மேலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மற்ற பங்குகளை விற்று, 35 கோடி ரூபாயை ஷா செலுத்தியுள்ளார். ஏமாற்றப்பட்டது தொடர்பாக ஷா அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.