உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழர்களை வம்புக்கிழுத்த அமைச்சர் ஷோபா உடனடி நடவடிக்கைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

தமிழர்களை வம்புக்கிழுத்த அமைச்சர் ஷோபா உடனடி நடவடிக்கைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

பெங்களூரு: 'தமிழர்கள் குறித்து மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபா பேசியது, தேர்தல் நடத்தை விதி மீறல்' என, தி.மு.க., அளித்துள்ள புகார் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின், பெங்களூரில் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர்ஷோபா நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். 'எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் போடுகின்றனர். அவர்களை தடுக்கவில்லை' என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அமைச்சரின் பேச்சுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்ப்பு

பெங்களூரிலும் ஷோபாவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.திருவள்ளுவர் தின விழா குழுத் தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:விசாரணை நிலுவையில் உள்ள வேளையில், பயங்கரவாத செயலாக பார்க்காமல், தமிழ் இனத்தையே வம்புக்கு இழுப்பதுபோல் பேசியிருப்பது ஏற்க முடியாது.கர்நாடகாவில், தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்களாக அன்புடன்பழகி வருகிறோம். அரசியல் ஆதாயத்துக்காக கன்னட, தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், மத்திய அமைச்சர் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரின் பேச்சால் தமிழர்கள் ஆக்ரோஷமாகஉள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியல்ரீதியாக பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்காக விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கு

பொது அமைதிக்கு எதிராக அவதுாறாக பேசுவது, கலகம் செய்ய துாண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், தமிழகத்தின் மதுரை நகர் சைபர் கிரைம் போலீசார், அமைச்சர் ஷோபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஷோபா விவகாரம் குறித்து பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:மத்தியில் பா.ஜ., ஆட்சி தான் உள்ளது. விசாரணை அமைப்புகளும் அவர்கள் வசம் உள்ளன. கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு வைக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது, ஷோபாவுக்கு தெரிந்து இருக்கிறது.இதுபற்றி விசாரணை அமைப்புகளிடம் அவர் ஏன் கூறவில்லை? அப்படிஎன்றால் மூடிமறைத்து இருக்கிறார் என்று தானே அர்த்தம்? ஷோபாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் மீது, குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பழிபோடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு

தன்மீது தமிழர்கள் மற்றும் காங்கிரசார் ஆக்ரோஷம் வெளிப்படுத்திய நிலையில், அமைச்சர் ஷோபா, தமிழர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:என் பேச்சுக்கு மன்னிப்பு கோருகிறேன். தமிழ் சகோதர - சகோதரிகளுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நல்ல விஷயத்தை கருதி, சில விவகாரத்தை பேசிவிட்டேன்.என் பேச்சு, தமிழர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பேச்சை திரும்பப் பெறுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் என, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரில் தி.மு.க., புகார் அளித்து இருந்தது. இதை பரிசீலித்த தலைமை தேர்தல் கமிஷன், அமைச்சர் ஷோபா மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நேற்றிரவு உத்தரவிட்டது. மேலும், இது குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதன் வாயிலாக அமைச்சரின் சர்ச்சை பேச்சு விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை