உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிவமொகா தொகுதியில் பற்றி எரியும் அதிருப்தி: போட்டி வேட்பாளராக களமிறங்குகிறார் ஈஸ்வரப்பா

ஷிவமொகா தொகுதியில் பற்றி எரியும் அதிருப்தி: போட்டி வேட்பாளராக களமிறங்குகிறார் ஈஸ்வரப்பா

ஷிவமொகா: ''ஒரு குடும்பம் மட்டுமே, கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கக் கூடாது. ஷிவமொகாவில் நானே சுயேச்சையாக போட்டியிடுவேன். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பேன்,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா போர்க்கொடி துாக்கியுள்ளார்.பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் காந்தேஷ். இவர், லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தந்தை, மகன் இருவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் வாய்ப்புக் கேட்டு இருந்தனர்.அவரும் கண்டிப்பாக 'சீட்' பெற்றுத் தருவதாகவும், தொகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படியும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் கூட்டம்

ஆனால், ஹாவேரி தொகுதிக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் ஈஸ்வரப்பா கோபம் அடைந்தார். மகனின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்று அதிருப்தி அடைந்தார்.அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து, ஷிவமொகா நகரின் பஞ்சாரா பவனில் நேற்று மாலை தன் ஆதரவாளர்களுடன் ஈஸ்வரப்பா ஆலோசனை நடத்தினார்.அரங்கம் முழுதும் ஆதரவாளர்கள் நிரம்பி இருந்தனர். இரண்டு முன்னாள் மேயர்கள், ஆறு முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வாரிசு அரசியல்

கூட்டத்தில் ஈஸ்வரப்பா பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் வாரிசு அரசியலை எதிர்ப்பவர். மாநில பா.ஜ.,விலும் காங்கிரஸ் போன்று, வாரிசு அரசியல் நடக்கிறது.கடந்த சட்டசபை தேர்தலின்போது, எனக்கு சீட் மறுக்கப்பட்டபோது, ஹாவேரியில் மகனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. எடியூரப்பாவும் வாய்ப்பு பெற்றுத் தந்து, வெற்றி பெற செய்வதாக உறுதி அளித்திருந்தார்.ஆனால், பசவராஜ் பொம்மை, ஷோபாவுக்கு ஆதரவாக மட்டுமே அவர் அடம் பிடித்து சீட் பெற்றுத் தந்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்னரே, ஷோபாவை வெற்றி பெற செய்யும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தது எப்படி?

ஒரு குடும்பம்

சதானந்தகவுடா, சி.டி.ரவி, நளின்குமார் கட்டீல், பிரதாப் சிம்ஹா ஆகியோர் ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக பேசியதால் தான், மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.எடியூரப்பாவின் ஒரு மகன் எம்.பி., இன்னொரு மகன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில தலைவர். அவரோ கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய பார்லிமென்ட் குழு உறுப்பினர், மத்திய தேர்தல் குழு உறுப்பினர் பதவியில் உள்ளார்.ஒரு குடும்பம் மட்டுமே கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கக் கூடாது. எனவே ஷிவமொகாவில் நானே சுயேச்சையாக கட்டாயமாக போட்டியிடுவேன். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பேன்.

மகன்கள், ஷோபா

நான் வெற்றி பெற்றால், மோடிக்கு தான் என் ஆதரவு. எடியூரப்பாவின் மார்பை பிளந்தால், அவரது இரு மகன்களும், ஷோபாவும் தான் இருப்பர். என் மார்பை பிளந்தால், ஸ்ரீராமரும், மோடியும் தான் இருப்பர்.பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, பெலகாவி வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் எடியூரப்பாவே அறிவித்துள்ளார். அப்படி என்றால், கர்நாடகாவில் அவர் தானே மேலிடம்.நான் போட்டியிடுவது உறுதி. இது ஆத்திரத்தில் எடுத்த முடிவு அல்ல. கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு.இவ்வாறு அவர்பேசினார்.நான் ஈஸ்வரப்பா மகனுக்கு அநீதி செய்யவில்லை. அவரது மகனுக்கு வாய்ப்பு வழங்கும்படி நான் வலியுறுத்தினேன். ஆனால், என்னை கட்டாயமாக போட்டியிடும்படி, பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் கூறியதால், நான் ஏற்றுக்கொண்டேன். ஈஸ்வரப்பாவுடன் பேசுவேன்.பசவராஜ் பொம்மை,பா.ஜ., வேட்பாளர், ஹாவேரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை