ககன்யான் திட்டம்: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்காக தமிழகத்தின் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றியை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அடுத்ததாக ககன்யான் திட்டத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்காக இஸ்ரோ, எல்விஎம்-3 ராக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் 8 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடிய திறன் படைத்தது இந்த ராக்கெட். சந்திரயான்-3 திட்டத்திலும் இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது.ககன்யான் திட்டத்திற்காக இந்த ராக்கெட்டில் சில மாறுதல்களை செய்துள்ளது இஸ்ரோ. இந்த ராக்கெட்டை உந்தி தள்ளும் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரையோஜெனிக் இன்ஜினின் உந்துசக்தி, செயல்திறன் ஆகியவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.