அரசு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; 10 நாட்களில் அறிக்கை தர உத்தரவு
பெங்களூரு : கேத்தகானஹள்ளி கிராமத்தில், அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ராம்நகர், பிடதி கேத்தகானஹள்ளி கிராமத்தில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது உறவினர்கள், மேலும் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வெங்கடேஷ் நாயக், சோமசேகர் முன்பு நடக்கிறது. நேற்று நடந்த விசாரணையில் அரசின் வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியா ஆஜரானார்.அப்போது, ''கேத்தகானஹள்ளி கிராமத்தில் சர்வே எண் 7, 8, 9, 16, 79 ல் 86 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதில் 14 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மேலும், 18 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி நடக்கிறது. சட்டப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.''அரசு நிலத்தில் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். நிலத்திற்கு உரிய ஆவணங்களை ஒரு குழு சரிபார்த்து வருகிறது. எங்களுக்கு தடய ஆய்வக அறிக்கையும் தேவைப்படுகிறது,'' என்று, நீதிபதிகள் முன்பு ராஜேந்திர கட்டாரியா கூறினார்.இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், 'ஏழைகள், பிச்சைக்காரர்கள் 5 அடி நிலத்தை ஆக்கிரமித்தால் கூட, பொக்லைன் கொண்டு வந்து அகற்றுகிறீர்கள். 'அரசு நிலத்தை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லையா. பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று சீக்கிரம் முடிவு செய்வது முக்கியம். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம், மீட்கப்பட்ட நிலம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.இதற்கிடையில், குமாரசாமியின் பண்ணை வீட்டை சுற்றியுள்ள இடங்களில், இரண்டாவது நாளாக நேற்றும் நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் நடந்தது. நிலத்தை அளந்து அதிகாரிகள், 'மார்க்' செய்து விட்டு சென்றனர்.