| ADDED : ஆக 19, 2011 07:32 PM
புதுடில்லி : வலுவான ஜன் லோக்பால் மசோதா, இந்த மாதம் 30ம் தேதிக்குள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். தலைநகர் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ள அன்னா ஹசாரே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசிற்கு, பார்லிமென்டிலும், <உயர்நிலைக்குழுவிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கான போதிய அளவு மெஜாரிட்டி உள்ளது. நாட்டின் தூண்களாகிய தாங்கள் லஞ்சம் கொடுக்காதீர்கள் மற்றும் வாங்காதீர்கள். இது ஒன்றே, நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். அதேபோல், லஞ்சம் பெறும் (ஊழல் செய்யும்) அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் வரை, நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன். இதையே, எனது வாழ்வின் குறிக்கோளாக நான் வைத்துள்ளேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை, நான் இந்த மசோதாவிற்காக போராடிக் கொண்டிருப்பேன். தன் தலைமையிலான குழு, இந்த ஜன்லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்வதற்காக, இந்த மாதம் 30ம் தேதியை கெடுவாக நிர்ணயித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.