ராஞ்சி, பிப். 1- நில அபகரிப்பு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 14 பேர் கைது
இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார். கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள வீட்டில் அவரிடம் ஏழு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். ஜனவரி 29 அல்லது 30ல் மீண்டும் ஆஜராகும்படி தெரிவித்தனர். இதற்கிடையே அவர், ராஞ்சியில் இருந்து டில்லி சென்றார். அப்போது அங்குள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., கார் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். அன்று இரவே ஹேமந்த் மாயமானார். யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாரணை
அவர் ராஞ்சிக்கு திரும்பி விட்டதாக தகவல் கிடைத்ததும், அமலாக்கத் துறையினர் நேற்று மதியம் 1:20 மணிக்கு முதல்வர் வீட்டுக்கு சென்றனர். இரவு 8:00 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். உடனே கவர்னர் மாளிகைக்கு சென்ற சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்; போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரனை, முதல்வராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். சம்பாய்க்கு ஆதரவு தெரிவித்து ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினார். பின்னர், ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
போலீசில் புகார்
டில்லியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது, ராஞ்சியில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சோரன் புகார் அளித்தார். 'டில்லியில் உள்ள என் வீட்டில் அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாகவும், என்னை அவமானப்படுத்தும் வகையிலும் சோதனை நடத்தி உள்ளனர். அங்கு கைப்பற்றிய காரும், பணமும் என்னுடையதே அல்ல. இதனால் நானும் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார்.