| ADDED : ஏப் 21, 2025 03:21 AM
லக்னோ : உத்தர பிரதேசத்தில் அழகு நிலையத்துக்கு சென்ற மனைவியின் தலைமுடி, ஜடை பின்னலை கத்தரிக்கோலால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யின் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரதாப். இவருக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி அடிக்கடி அழகு நிலையம் சென்று, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவர். வழக்கம்போல, நேற்று முன்தினம் அழகு நிலையத்துக்கு அவர் சென்றபோது, சிறிது நேரத்தில் அங்கு வந்த ராம் பிரதாப், அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து, மனைவியின் தலைமுடி, ஜடை பின்னலை வெட்டி வீசினார்.இந்த சம்பவத்தை அறிந்த ராம் பிரதாப்பின் மாமனார் ராதாகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்தார். அதில், 'ராம் பிரதாப் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என் மகளை கடந்த ஓராண்டாக கொடுமைப்படுத்தி வந்தனர். 'பிரிஜ், ஏர்கூலர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை எங்கள் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி என் மகளை சித்ரவதை செய்தனர். 'அதன் உச்சகட்டமாக, அழகு நிலையத்துக்கே சென்று, என் மகளின் தலைமுடியை ராம் பிரதாப் வெட்டியுள்ளார். அவருடன் மூன்று பேர் சென்றுள்ளனர்' என கூறினார். இதன்படி வழக்குப்பதிவு செய்து, ராம் பிரதாபை போலீசார் கைது செய்தனர்.ராம் பிரதாப் வீட்டின் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், 'அடிக்கடி அழகு நிலையத்துக்கு மனைவி செல்வதால் ராம் பிரதாப் கோபத்தில் இருந்தார். நேற்று முன்தினம் புருவத்தை அழகுபடுத்துவதற்காக, அழகு நிலையத்துக்கு மனைவி சென்றதை அறிந்ததும், ஆத்திரத்தில் ஜடையை வெட்டியுள்ளார்' என்றனர். மாறுபட்ட தகவல்களால், குழப்பமடைந்த போலீசார் உண்மையான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.