உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்களுக்கு வரப்போகிறது நமக்கே நமக்கான ஷூக்களின் அளவு

இந்தியர்களுக்கு வரப்போகிறது நமக்கே நமக்கான ஷூக்களின் அளவு

புதுடில்லி: பிரிட்டிஷார் வகுத்த செருப்பு, ஷூக்களின் அளவுகளையே இந்தியர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்தியர்களுக்கென பிரத்யேகமான 'பா'(Bha - அதாவது பாரத் என்பதன் சுருக்கம்) என்ற அளவு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு, ஷூ போன்ற காலணிகள் சில அளவுகளை குறிப்பிடுகின்றன. ஒவ்வொருவரின் பாதத்தின் அளவுக்கேற்றபடி காலணி அளவுகளும் மாறுபடும். அப்படி நாம் பயன்படுத்தும் அளவுகளானது பிரிட்டிஷ் காலத்தில் வகுக்கப்பட்டவை. அதையே காலம்காலமாக பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது இந்தியர்களுக்கென பிரத்யேகமான அளவு முறையை கொண்டு வந்துள்ளனர். பாரத் என்பதை குறிப்பிடும்படி, 'பா' (BHA) என்ற அளவு முறை விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.பிரிட்டிஷார் இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் யு.கே (UK) அளவுகளை அறிமுகப்படுத்தினர். அதையே தற்போது வரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களை விட இந்தியர்களின் பாதங்கள் அகலமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. எனவே, இந்தியாவில் நடைமுறையில் உள்ள அளவுகள் நமது சரியான காலணி அளவு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வயதை வைத்து அவர்களுக்கு ஏற்றபடியான சராசரி அளவை கணக்கிட்டு இந்த 'பா' அளவு காலணிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

'பா' அளவுகள்

'பா' காலணி அளவுகள் மொத்தம் 8 அளவுகளை கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளன. அதன்படி, I - கைக்குழந்தைகள் - (0 முதல் 1 வயது வரை), II - குழந்தைகள் (1 முதல் 3 வயது வரை), III - சிறிய குழந்தைகள் (4 முதல் 6 வயது வரை), IV - குழந்தைகள் (7 முதல் 11 வயது வரை) , V - பெண்கள் (12 முதல் 13 வயது வரை), VI - சிறுவர்கள் (12 முதல் 14 வயது வரை), VII - பெண்கள் (14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் VIII - ஆண்கள் (15 வயது மற்றும் அதற்கு மேல்) ஆகிய அளவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக சென்னையை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 'பா' அளவின்படி தயாரிக்கப்படும் காலணிகள் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேருக்கு சரியான பொருத்தம் மற்றும் தற்போதையதை விட சிறந்த வசதியுடன் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள தகவல்களை வைத்து, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

2025ல் நடைமுறை

இந்த பரிந்துரைகள் இந்திய தரநிலைகளுக்கான பணியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 'பா' அளவு முறை அமல்படுத்தப்படும். இது தற்போதுள்ள அளவு அமைப்புகளை முழுமையாக மாற்றி அமைப்பதால், 'பா' அளவு தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்ட செருப்பு, ஷூக்கள் பொருத்துதல் சோதனை, பரிசோதனை மற்றும் கருத்துகளுக்காக பயனர்களுக்கு வழங்கப்படும். அதில் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில், 2025ல் இந்தியாவின் 'பா' அளவுகள் நடைமுறைப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

prakash
மே 20, 2024 19:29

ரொம்ப நல்லது


பாக்கியம்
மே 20, 2024 19:16

அப்புடியே இஞ்ச், அடி, மீட்டர், செண்டிமீட்டர், கிலோ, லிட்டர் எல்லாம் நமக்கு ஒத்துவராது. பழையபடி தப்படி, வீசை, படி, ஒழக்கு போன்ற அளவைகளை கொண்டு வரணும்.


முருகன்
மே 20, 2024 19:15

தேவையற்ற விஷயங்களை விட்டு விட்டு முன்னேற்றத்திற்கு என யோசித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்


Rajah
மே 20, 2024 18:40

இதன் பெயர் குறித்து இன்று அல்லது நாளை டிவியில் விவாத மேடைகள் இடம்பெறும் தேச விரோதிகள் நால்வர் சூழ்ந்து ஒரு தேசியவாதியை கேள்விக் கணைகளால் குடைவார்கள் தேச விரோதிகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சியை நத்துபவரும் செயல்படுவார் பாரத் என்றாலே அவர்களுக்கு ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவது போல் இருக்கும்


Rajinikanth
மே 20, 2024 18:33

ஆஹா இனி எல்லோருக்கும் மூன்று வேளை சோறு, தங்க இடம், உடுத்த உடை எல்லாம் கிடைத்துவிடும் வாழ்க மோடியின் மதி நுட்பம்


K.Muthuraj
மே 20, 2024 20:10

நமக்குத்தான் நல்லதுக்கு கேட்டதுக்கு வித்தியாசமே தெரியாதுல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை