யு.பி.ஐ.,யில் பள்ளி கட்டணம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
புதுடில்லி:'யு.பி.ஐ., உள்ளிட்ட, 'டிஜிட்டல்' பரிவர்த்தனைகள் வாயிலாக, பள்ளி மற்றும் தேர்வு கட்டணங்கள் செலுத்தப்படுவதை அனைத்து மாநிலங்களும் ஊக்குவிக்க வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம்: பள்ளிகளில் நிதி பரிவர்த்தனைகளை நவீனமயமாக்க, யு.பி.ஐ., சேவையை ஊக்குவிக்க வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட அமைப்புகளில், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பெற்றோர்களிடம் இருந்து பெற உதவும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக யு.பி.ஐ., நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பெற்றோர் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இது, மத்திய அரசின் டிஜிட்டல் மாற்றத்தின் குறிக்கோளுடன் கல்வி அமைச்சகத்தை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.