நாட்டை விட ஓட்டு முக்கியமா? ஒமருக்கு பா.ஜ., கண்டனம்
புதுடில்லி: தேசபக்தி பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், நாடு முழுதும் கலைநிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கும் ஜம்மு - காஷ்மீரிலும், அனைத்து பள்ளிகளிலும், 'வந்தே மாதரம்' பாடலை பாட, கலாசார துறை சார்பில் கடந்த மாத இறுதியில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு, முதாஹிதா மஜ்லிஸ் - இ - உலேமா உள்பட பல்வேறு மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 'வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாடுவதற்கு அனுமதி தரவில்லை. இந்த விவகாரத்தில் வெளி உத்தரவுகளோ, தலையீடுகளோ பின்பற்றப்படாது' என, முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறியதாவது: ஓட்டு வங்கி அரசியலுக்காக வந்தே மாதரம் பாடலுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓட்டு வங்கி அரசியலுக்காக சில தலைவர்கள் இப்படி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மற்றவர்களையும் எதிர்க்கும்படி துாண்டி விடுகின்றனர். ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக நேரு கூட வந்தே மாதரம் பாடலில் மூன்றில் இரு பங்கு வரிகளை நீக்கினார். வரலாற்றில் நிகழ்ந்ததை, தற்போது ஒமர் அப்துல்லாவும் பின்பற்றுகிறார். நாட்டை விட தாஜா செய்யும் அரசியல் தான், ஒமர் அப்துல்லாவுக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.