ஜாதிவாரி கணக்கெடுப்பு தெலுங்கானாவில் துவக்கம்
ஹைதராபாத்,தெலுங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதிகாரப்பூர்வமாக நேற்று துவங்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் இக்கணக்கெடுப்பை நடத்தி முடிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபைத் தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்' என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இதன்படி கடந்த டிசம்பரில், ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு, தெலுங்கானா சட்டசபையில், இந்த கணக்கெடுப்பு நடத்த தீர்மானமும் நிறைவேற்ற்றியது.இதையடுத்து, ஹைதராபாதில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் நேற்று துவக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் நோக்கில், இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில், சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இக்கணக்கெடுக்கும் பணிக்காக, ஆசிரியர்கள் உட்பட 80,000 பேருக்கும், அவற்றை மேற்பார்வையிட 18,000 பேருக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் தரவுகளின்படி அரசின் நலத்திட்டங்கள், உரிய பயனாளிகளுக்கு சென்றடையும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2014ம் ஆண்டு, தெலுங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கல்வி, வேலை உள்ளிட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமான முடிவுகளை அந்த அரசு வெளியிடவில்லை.இந்நிலையில், காங்கிரஸ் அரசு மேற்கொண்டு உள்ள இக்கணக்கெடுப்பில், அனைத்து ஜாதியினரின் சமூக, பொருளாதார விபரம் உள்ளிட்டவை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.