விருந்தினர் மாளிகை ஆகிறது கெஜ்ரிவால் வசித்த பங்களா
புதுடில்லி:அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது வசித்த அரசு பங்களாவை, அரசு விருந்தினர் மாளிகையாக மாற்ற டில்லி அரசு திட்டமிட்டுள்ளது. டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்த போது, புதுடில்லி சிவில் லைன்ஸ் கொடி மரச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். அவர் பதவிக் காலத்தில் இந்த பங்களா புதுப்பிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர வசதிகள் செய்து அரசு பணத்தை வீணடித்ததாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தப் பணத்தை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வசூலித்து அரசு கருவூலத்தில் சேர்ப்போம் எனவும் பா.ஜ., அரசு கூறியுள்ளது. இந்நிலையில், டில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி மாநகரில் மற்ற மாநிலங்களின் விருந்தினர் இல்லங்கள் அமைந்துள்ளன. அதேபோல, டில்லி அரசின் விருந்தினர் மாளிகை ஒன்றையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான புதிய கட்டடம் எதுவும் கட்டாமல், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த பங்களாவையே அரசு விருந்தினர் மாளிகையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் விதமாக சிற்றுண்டி சாலை ஒன்றையும் இந்த பங்களாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிற்றுண்டிச் சாலையை பொதுமக்களும் பயன்படுத்தலாம். வாகன நிறுத்துமிடம், காத்திருப்பு அறை உட்பட மற்ற வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. அரசின் கூட்டம் மற்றும் பயிற்சிகளுக்கு வரும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்கலாம். மற்றா மாநில விருந்தினர் மாளிகைகளைப் போலவே இங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது இந்த பங்களாவை 10 ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். தினமும் தூய்மைப்படுத்துதல், மின் சாதனங்களை பராமரித்தல் ஆகிய பணிகாளை செய்கின்றனர்.