| ADDED : நவ 25, 2025 06:46 AM
கோலாலம்பூர்: மலேஷியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து, அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. ' பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்' போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் சிறுவர் - சிறுமியர் சீரழியும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. வரும் டிச., 10ம் தேதி முதல் இந்த தடை முழுவீச்சில் அமலாகவுள்ளது. இந்த வரிசையில், தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவும் இணையவுள்ளது. வரும் 2026 முதல் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதள கணக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து மலேஷிய தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் கூறியதாவது: நிதி மோசடி, பாலியல் சுரண்டல் போன்ற ஆன்லைன் குற்றங்களில் இருந்து இளம் வயதினரைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு கேபினட் ஒப்புதல் அளித்துவிட்டது. சமூக வலைதள கணக்குகளுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் எந்த மாதிரியான அணுகுமுறைகளை கையாண்டன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அநேகமாக 2026 முதல் இந்த தடை அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.